முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்ததாக அமாவாசை கூறப்படுவது ஏன்..?
அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோர்களை ஆராதித்து, அவர்களை வணங்கினால் நாமும், நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக, பித்ரு சாபம் இல்லாமல், பெருமகிழ்வுடன் வாழலாம் என்கின்றனர்.
அந்த வகையில் ஆவணி மாத அமாவாசை நாளன்று, முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள். வீட்டில்_உள்ள நம் முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்யுங்கள். சந்தனம், குங்குமம் இடுங்கள்.
முன்னோர்களை நினைத்து, தினமும் காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும், வம்சத்தையும் வாழ செய்யும். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது.