திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (17:36 IST)

பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மனின் தல வரலாறு !!

Goddess Bhavani Amman
சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது. பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.


பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் துர்கை. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.

பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.

நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்த புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

இத்திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம்.

மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். வெளிச்சத்துடன் ஜொலிக்கிறது. மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருடன்மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து, பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.