தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.
இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும்.
நயன தீட்சை: குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும்.
பரிச தீட்சை: குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும்.
வாசக தீட்சை: குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும்.
மானச தீட்சை: குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.
சாத்திர தீட்சை: குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும்.
யோக தீட்சை: குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும்.
ஒளத்திரி தீட்சை: பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும்.
சமய தீட்ஷை: யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார். அதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச்செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும்.
விசேச தீட்க்ஷை: சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை.
சாம்பவி தீட்சை: சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான்.
அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர். "சாம்பவி தீட்சை" என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது.