1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2025 (19:34 IST)

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்!

tanjavur
இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. 
 
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில், அதன் பிரமாண்டமான கட்டிடக் கலையால் மட்டுமின்றி ஆன்மிக உற்சாகத்தாலும் பிரசித்தி பெற்றது. தினமும் நாடு முழுவதும், உலகின் பல மூலைகளிலிருந்து பக்தர்கள் இங்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.
 
விழாவின் தொடக்க நாளில், சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகள் சிறப்பான அலங்காரத்துடன் கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினர். பின், அபிஷேகங்கள் நடைபெற்று, நாதஸ்வரம் முழங்க, கொடியேற்றம் செய்யப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
 
இன்று மாலை 6.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்; அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. நாளை  காலை 8 மணிக்கு விநாயகர் பல்லக்கில் புறப்பட, மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் அவர் எழுந்தருளுவார்.
 
மே 7-ஆம் தேதி தேரோட்டம், மே 10-ஆம் தேதி தீர்த்தவாரி மற்றும் வெள்ளி ரிஷப வாகன சேவை நடைபெற உள்ளது. அதே நாளில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
    
Edited by Mahendran