அமேசான் காடு: நிலத்துக்குப் போராடிய பழங்குடி செயற்பாட்டாளரை சுட்டுக் கொன்ற மரம் வெட்டிகள்

amazon
sinojkiyan| Last Updated: ஞாயிறு, 3 நவம்பர் 2019 (15:10 IST)
பூர்வகுடியான பெளலோ பெளலினோ குவாஜஜ்ரா
 
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் நிலத்துக்காகப் போராடிவந்த இளம் பழங்குடி செயற்பாட்டாளர் ஒருவர் சட்டவிரோதமாக செயல்படும் மரம் வெட்டும் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுதவிர, மேலும் ஒருவரை இந்த கும்பல் காயப்படுத்தியுள்ளது.
மரான்ஹூ மாகாணத்தில் உள்ள அராரிபோ என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பழங்குடி பிரிவைச் சேர்ந்த பெளலோ பெளலினோ குவாஜஜ்ரா வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் சுடப்பட்டார்.
 
அராரிபோ வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கார்டியன்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட் என்ற வன பாதுகாப்பு குழுவில் பெளலோ உறுப்பினராக இருந்துள்ளார்.
 
பெளலோவின் கொலை அமேசான் காடுகளை பாதுகாக்க போராடும் பாதுகாவலர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை குறித்த கவலைகளை உருவாக்கியுள்ளது.
 
சட்ட விரோத மர கடத்தல்காரர்களைத் தேடும் பணியில் துப்பாக்கியுடன் பெளலோ
சர்வைவல் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ நிறுவனத்தின் கூற்றுப்படி, இதற்கு முன்னர் அமேசான் காடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குறைந்தது மூன்று பேர் தங்கள் குடும்பத்தாருடன் சேர்த்து கொல்லப்பட்டனர்.
 
பூர்வகுடி மக்களின் நலனுக்காக இயங்கிய அதிகாரி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் டபடிங்கா நகரில் கொலை செய்யப்பட்டார்.
 
பெளலோவின் மரணத்தை குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ள பிரேசிலின் நீதித்துறை அமைச்சர் செர்ஜியோ மோரோ, "இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்னால் நிச்சயம் நிறுத்துவோம்," என்று ட்வீட் செய்துள்ளார்.
 
பெளலோவுக்கு என்ன நடந்தது?
 
அராரிபோ வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக மரம் வெட்ட நுழைந்தவர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் பெளலோவின் தலையில் குண்டு பாய்ந்தது என்று பிரேசில் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பெளலோவுடன் இருந்த மற்றொரு பூர்வகுடி இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளார்.
 
இந்த தாக்குதலை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் மரக் கடத்தல்காரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக பிரேசில் போலீஸார் கூறுகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :