வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (10:03 IST)

முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி விரதம் !!

Lord Murugan
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.


முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம்.

வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டிப்பது. நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது. திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.

கந்த சஷ்டிக் கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.