ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:07 IST)

விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியே ரிஷி பஞ்சமி விரதம் !!

Rishi Panchami 3
'ரிஷி'கள் என்பவர்கள், 'மந்திர த்ரஷ்டா' அதாவது, நாம்  ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள். அவர்களது மகிமை அளவிடற்கரியது.


நாம் நல்வாழ்வு காண உதவும் மந்திரங்கள், ரிஷிகள் நமக்கு அளித்த அருட்கொடை. அவர்கள் தம் தபோவலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நாம் வெற்றி கொள்ளலாம். விச்வாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி  மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.

விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது திண்ணம். ரிஷிகள் அநேகம் இருந்தாலும் சப்த ரிஷிகள், ரிஷிகளில் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இவர்கள், காசியில், சிவபெருமானை வேண்டித் தவமிருந்து நட்சத்திரப் பதவி பெற்று, வான மண்டலத்தில் சப்த ரிஷி  மண்டலமாகக் கொலுவிருக்கிறார்கள். வானமண்டலத்தில் சனிபகவான் உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை சப்த ரிஷிகளும் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், இரவில், காசி விஸ்வநாதரின் கருவறையில் ஏழு பண்டாக்கள்(பூஜகர்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர். இது 'சப்த ரிஷி பூஜை' என்றே சிறப்பிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதரின் ஆலயத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை ஆகும் இது.

துருவ நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக, வான மண்டலத்தில் முக்கியத்துவம் பெறுவது சப்த ரிஷி மண்டலமே, இதன் சுழற்சியை வைத்தே, இரவில் நேரம் கணித்து வந்தனர் நமது முன்னோர்.