1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (17:31 IST)

ஆடி பிரதோஷம் முதல் ஆடிப்பூரம் வரை! ஆடி மாத முக்கிய விசேஷ நாட்கள்!

murugan

ஆடி மாதம் தமிழ் மாதங்களில் ஆன்மீகம் கமழும் மாதங்களில் ஒன்று. இந்த ஆடி மாதத்தில் வரும் பல முக்கியமான விசேஷ நாட்கள் வாழ்க்கையில் நன்மைகளை அருள்பவை

ஆடி மாதத்தின் முக்கியமான விசேஷ நாட்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆடி பிரதோஷம்: இன்று (19.07.2024) மற்றும் ஆகஸ்டு 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆடி பிரதோஷம் வருகிறது. இன்று வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம். இந்த பிரதோஷ நாளில் சிவனை வழிபடுவது சுக்கிரனின் அருளை தரும். வியாழக்கிழமை பிரதோஷ நாளில் சிவ பெருமானுடன், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது கூடுதல் சிறப்பு

ஆடிப்பௌர்ணமி: ஆடி பௌர்ணமி நாள் அம்மனுக்கு உரிய நாளாகும். இந்நாளில் அம்பிகையை வழிபடுவது சீரும் சிறப்புமான வாழ்வை தரும். இதே ஆடி பௌர்ணமியில்தான் ஆடித்தபசு வருகிறது. இந்த நாளில் சிவன், விஷ்ணு ஆலயங்களில் சென்று வணங்குவது சிறப்பு

ஆடிக்கிருத்திகை: ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் முருகபெருமானுக்கு உரிய நாளாகும். இந்த ஆடிக்கிருத்திகை இந்த மாதம் 29ம் தேதி அன்று வருகிறது. இந்நாளில் முருகனை வேண்டி விரதம் மேற்கொண்டு முருகன் கோவில்களுக்கு சென்று வருவது காரியத்தடைகளை நீக்கி வெற்றியை தரும்.

Aadi perukku

ஆடிப்பெருக்கு: ஆடி 18ம் நாள் நீர்நிலைகளை வழிபடும் நாள்தான் ஆடிப்பெருக்கு. இந்நாளில் நீர்வளம் செழிக்கவும், விவசாயம் தழைக்கவும் ஆற்றங்கரைகளில் மக்கள் வழிபடுகிறார்கள். இந்நாளில் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் போன்ற மங்கள பொருட்களை தானம் தருவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஆடிப்பெருக்கு ஆகஸ்டு 3ம் தேதி வருகிறது.

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக ஆடி அமாவாசை உள்ளது. இந்நாளில் மூத்தோர் வழிபாடு செய்வதால் சகல பாவங்களிலும் நிவர்த்தி ஏற்படும். ஆகஸ்டு 4ம் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

ஆடிப்பூரம்: ஆண்டாள் அவதரித்த நாளான ஆடிப்பூராத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேர் உறசவம் நடைபெறுகிறது. இந்நாளில் ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை பாடி பெருமாளை வேண்டுவது சிறப்பு வாய்ந்தது.

Edit by Prasanth.K