அங்காளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கோலாகலம்..!!
பண்ருட்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளி அம்மன் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து காளி வேடம் அணிந்து நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர் எஸ் மணி நகர் பகுதியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ அங்காளி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் மயான கொள்ளை தீமிதி திருவிழா காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கி மூன்று தினங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இதில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்து ஸ்ரீ அங்காளி அம்மன் வேடம் அணிந்து கையில் தீச்சட்டி ஏந்திய படியும், சக்தி கரகம் தூக்கியபடியும் பக்தர்கள் குழந்தைகளை சுமந்தபடி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி பம்பை உடுக்கை முழங்க பக்தி பாடல்கள் பாடியும் பெண்கள் கும்மியடித்து ஆடிய படி மாசி மாத மயான கொள்ளை தீமிதி திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது ஏராளமான பெண்களுக்கு அருள் வந்து ஆடியது அங்கிருந்தவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்தியது. அப்போது ஸ்ரீ அங்காளி அம்மன் பச்சை நிற பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் பண்ருட்டியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளி அம்மன் அருளை பெற்றனர்.