கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!
கோடை பருவம் நெருங்கி வருவதையொட்டி, ஊட்டி சிறப்பு மலை ரயில் இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இயங்கும் நீலகிரி மலை ரயில், அதன் யூனஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தும், நூற்றாண்டுகடந்த வரலாற்றும் காரணமாக, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஒவ்வொரு கோடை பருவத்திலும், தென்னக ரயில்வே நிர்வாகம் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயிலை இயக்கி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான கோடை சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும், ஞாயிறு, காலை, 9:10 மணிக்கு இயக்கப்பட உள்ளது. அதே போன்று ஊட்டியில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் திங்கட்கிழமை காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ஊட்டி சிறப்பு மலை ரயில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை இயக்கப்படும். இன்று காலை 9:10 மணிக்கு தொடங்கிய முதல் பயணத்தில், கோவையின் தனியார் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
Edited by Mahendran