வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. சுதந்திர தின சிறப்பு பக்கம்
  3. சுதந்திர போராட்ட வீரர்கள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (11:39 IST)

இந்தியாவின் 72-வது சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கொடியேற்றி, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மேலும் தலைநகர் தில்லியில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைப்பெறுவது வழக்கம்.
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
 
இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலும் அன்றைய நாளில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூறும் வகையில் மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
 
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்கள்.
 
நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், 
 
கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும்  கொண்டாடுவோம்.
 
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, மறைந்த தேசத் தலைவர்களை போற்றி வணங்குவோம். நம் நாட்டிற்கு புகழ் சேர்த்திடும் பாரப்பரியம், பண்பாட்டை காத்து போற்றுவோம். வாழ்க இந்தியா!!