மத்திய அரசின் முடிவுகளில் மூக்கை நுழைக்கும் ஜியோ! – கடுப்பான கூட்டமைப்பு!
தொலைத்தொடர்பு கூட்டமைப்பு நிறுவனங்களின் கடன் பாக்கியை தள்ளுபடி செய்வது குறித்த மத்திய அரசின் முடிவில் ஜியோ மறுபரிசீலனை கோரி கடிதம் எழுதியுள்ளது.
ஆரம்பம் முதற்கொண்டே மற்ற நிறுவனங்களை ஜியோ ஒழித்துக்கட்டுவதற்கு ஏக காலத்தில் வேலை பார்த்து வருவதாக கார்ப்பரேட் செல்லுலார் நிறுவனங்களிடையே பேச்சு அடிப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் உள்ள ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்கள் கட்டாத நிலுவை தொகையை கட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு வரிகளில் தளர்வு மற்றும் கடன் பாக்கியில் கழிவு அல்லது காலநீட்டிப்பு போன்ற உதவிகளை கேட்டு தொலைத்தொடர்பு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தரவில்லை.
அதற்கு ஜியோ முந்திகொண்டு மத்திய அமைச்சகத்துக்கு தானும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி பிரசாத்துக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் பாக்கி மற்றும் அபராத தொகைகளில் விலக்கு அளிப்பது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும் என தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை தாண்டி தனிப்பட்ட வகையில் மத்திய அமைச்சர் இதில் முடிவெடுக்க இயலுமா என்பது ஒருபக்கம் இருக்க, தொலைத்தொடர்பு கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசு இடையேயான பேச்சு வார்த்தையில் ஜியோ தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.