வோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்!
இந்திய டெலிகாம் சந்தையில், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை அடுத்து வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்காக உள்ளது.
இந்நிலையில், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்பு குறித்து பேச்சு எழுந்தது. இதற்காக தீவிர முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டன. இதற்கு பலனாக இந்த இணைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தகவல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வோடபோன் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விட்டோரியோ கோலோவ் பின்வருமாறு கூறினார், வரும் அக்டோபர் மாதம் வரை இந்த பொறுப்பில் இருப்பேன் அதற்குள் புதிய நிறுவனமான வோடபோன் ஐடியா உருவாகும் என தெரிவித்தார்.
இந்த இரு நிறுவனங்கள் இணைந்தால், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உயரும். புதிய நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாகவும், 35 சதவீத சந்தை மற்றும் 43 கோடி வாடிக்கையாளர்களும் இருப்பார்கள் என தெரிகிறது.