கண்டிப்பாக காசை கொடுத்துடுவோம்! எழுதி கொடுத்த ஏர்இந்தியா! – எரிபொருள் கொடுத்த நிறுவனங்கள்!

air india
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 18 அக்டோபர் 2019 (13:17 IST)
ஏர் இந்தியா எரிபொருள் வாங்கிய தொகையை செலுத்தாததால் இனி எரிபொருள் சப்ளை செய்யப்படமாட்டாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தங்கள் முடிவை திரும்ப பெற்றுள்ளன.

அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சமீப காலமாக தீராத நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய எரிப்பொருள் நிலுவை தொகையை வழங்குமாறு தொடர்ந்து ஏர் இந்தியாவிடம் வலியுறுத்தி வந்தன.

மூன்று நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா வழங்க வேண்டிய நிலுவை தொகை 5 ஆயிரம் கோடி ரூபாய். இந்த தொகையை மொத்தமாக வழங்க முடியாது என்றும் மாதம் 100 கோடி ரூபாய் வீதம் தவணை முறையில் தருவதாகவும் ஏர் இந்தியா கேட்டிருந்தது. அதற்கு பிறகு மாதம்தோறும் சரியாக தொகையை ஏர் இந்தியா அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வெள்ளிக்கிழமை முதல் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் அளிப்பதை நிறுத்தி கொள்ள போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் ஏர் இந்தியா பணம் தருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளதால் தங்கள் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :