திமுகவுக்கு ஆதரவான வலுவான மதசார்பற்ற அலை வீசுகிறது - மு.க.ஸ்டாலின்

Ilavarasan| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:41 IST)
நான் 18 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். 108 சட்ட மன்ற தொகுதி வாக்காளர்களை சந்தித்து இருக்கிறேன். அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். திமுகவுக்கு ஆதரவான வலுவான மதசார்பற்ற அலை வீசுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைக்கு 2 இடமும், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
நான் 18 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். 108 சட்ட மன்ற தொகுதி வாக்காளர்களை சந்தித்து இருக்கிறேன். அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். திமுகவுக்கு ஆதரவான வலுவான மதசார்பற்ற அலை வீசுகிறது.

எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அது பெரிய விஷயமில்லை. திமுகவுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுகவின் திட்டங்களை அவர் முடக்கி உள்ளார். சட்டசபையில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் அடுத்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் உண்மையான போட்டி. அந்த வரலாறு தொடரும். மற்றவைகள் பொருத்தமானதாக இல்லை.
ஈழத் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறியதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து நாங்கள் விலகினோம்.

தற்போது கூட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்தது. பா.ஜனதாவும் இந்த விஷயத்தில் அமைதி காக்கிறது. இதனால்தான் தேசிய கட்சிகளிடம் இருந்து தள்ளி இருக்கிறோம்.
நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம். இதுதான் திமுக தேர்தல் அறிக்கையின் குறிக்கோளாகும். முதலாவதாக ஒரு கிலோ அரிசியை 1 ரூபாய்க்கு கொடுத்தோம். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருக்கிறது.

தேசிய வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, மனித உரிமைகள், சிறுபான்மையினர் உள்பட அனைவரது நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருப்பதை திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :