1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:54 IST)

அதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லையா? - கருணாநிதி கேள்வி

அதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
FILE

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்கு கருணாநிதி மட்டுமே சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்றும் தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டதே தான்தான் என்றும் பேசியிருக்கிறார்.

அவருக்கு நான் பதில் கூறுவதைவிட, முஸ்லிம்களுக்காக அன்றாடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், அண்ணாவின் நெருங்கிய நண்பர், பேராசிரியர் காதர் மொய்தீனும், மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், கடந்தமுறை ஜெயலலிதாவுடன் தோழமைக் கொண்டு அந்த கட்சி வெற்றி பெற மாநிலம் முழுவதும் சுற்றி பாடுபட்டவருமான ஜவாருல்லாவும் என்ன சொன்னார்கள் என்பதைக் குறிப்பிட்டாலே, முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு வழங்கியது, திமுக ஆட்சியா, ஜெயலலிதாவா என்பது தெளிவாகிவிடும்.

ஜெயலலிதா, தூத்துக்குடியில் பேசும்போது அதிமுக ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதே இல்லை என்று கூறி தப்பிக்கப் பார்த்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கும், கரசேவைக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அவர் அப்போது எவ்வாறு நடந்து கொண்டார் என்பது பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன?.
FILE

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு கிளைத் தலைவர், மறைந்த ஏ.கே.ஏ.அப்துல் சமத் அயோத்தியில் நடைபெற்ற கரசேவையில் அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்று அப்போதே குற்றஞ்சாட்டியபோது, ஜெயலலிதா அதை மறுத்தாரா?.

தமிழக மக்களிடம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று லட்சக்கணக்கான கையெழுத்துக்களை வாங்கி பாஜகவினர் தமிழக ஆளுநரிடம் அப்போது கொடுத்தபோது, அந்த மனுவிலே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக அப்போது பாஜக சார்பிலே அறிவித்தபோது, ஜெயலலிதா அப்போது அதை மறுக்கவில்லையே? இப்படியெல்லாம் பேசி, இஸ்லாமியர்களை ஏமாற்றிவிட முடியுமா என்ன? என்று கருணாநிதி கூறியுள்ளார்.