செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:55 IST)

அவதூறு வழக்கில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு ரூ.2,500 அபராதம்

அவதூறு வழக்கில் ஆஜராகாத ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு தலா ரூ.2,500 அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
FILE

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலின் மகனும் வழக்கறிஞருமான அமித் சிபல், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்வால், மணிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண், சாஜியா இல்மி ஆகியோர் மீது டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமைச்சர் கபில் சிபலின் செல்வாக்கை பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வழக்குகளில்தான் ஆஜராவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தன்னை பற்றி அவதூறாக பேசி இருப்பதாக கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குற்றம்சாற்றப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி தலைவர்கள் 4 பேரும் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமித் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்நிலையில், அமித் சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுனில்குமார் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த் பூஷண், சாஜியா இல்மி ஆகியோர் ஆஜர் ஆனார்கள். ஆனால் கெஜ்ரிவாலும், சிசோடியாவும் ஆஜராகவில்லை.

தான் பெங்களூரில் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதியை கேட்டிருந்தார். இதேபோல், தான் அமேதி தொகுதிக்கு சென்றிருப்பதால் தனக்கும் ஒரு நாள் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிசோடியா கேட்டிருந்தார்.

நேற்று விசாரணையின் போது அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கு செலவாக தலா ரூ.2,500 செலுத்துமாறு கெஜ்ரிவால், சிசோடியாக ஆகியோருக்கு உத்தரவிட்டார். மேலும் பிரசாந்த் பூஷணும், சாஜியா இல்மியும் வழக்கு விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் ஆஜராவார்கள் என்பதன் அடிப்படையில் ஜாமீன் பத்திரம் இன்றி அவர்களை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.