வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:29 IST)

பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி தளர்வு

வியாபாரி என்ற ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் ஆகாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
FILE

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளை பறக்கும் படை மூலம் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தி வருகிறது. இதையொட்டி சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருமே சோதனை செய்யப்படுகின்றனர்.

இதுபோன்ற சோதனையால் அவர்களின் இயல்பு வாழ்க்கை, வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, தேர்தல் கமிஷன் தனது கெடுபிடிகளை சற்று தளர்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:-

அரசியல் கட்சியினர் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம். வியாபாரிகளுக்கு இதில் நாங்கள் உச்சவரம்பு நிர்ணயிக்கவில்லை. ரூ.10 லட்சத்துக்கு மேல் வியாபாரிகள் யாராவது பணம் கொண்டு சென்றால், அவர்கள் வருமான வரித்துறையினரிடம் கணக்கு கொடுக்கவேண்டும். தங்களை வியாபாரிதான் என்று காட்டுவதற்கு 3 ஆவணங்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

முதலாவது, அவர்கள் வணிகவரி அல்லது அரசின் பிற துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர் என்பதற்கான அத்தாட்சி. இரண்டாவது, சோதனையின்போது கையில் இருக்கும் பணம் எந்த வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ரசீது. மூன்றாவது, அவர்கள் சமீபத்தில் செய்த வர்த்தகம் தொடர்பான ரசீது.

இந்த மூன்று ஆவணங்களுமே, அவர் வியாபாரிதான் என்பதையும், வியாபாரி என்ற பெயரில் அவர் பணத்தை மறைத்து எடுத்துச்செல்லவில்லை என்பதையும் நிரூபித்துவிடும். எனவே, அவரது பணம் அல்லது பொருட்கள் திருப்பி தரப்பட்டுவிடும். அப்படி உடனே திருப்பி தரப்படாவிட்டால், இதுபோன்ற ஆவணங்களை காட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அப்பீல் செய்து பணத்தையோ பொருட்களையோ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எனவே, சோதனை விஷயத்தில் இந்த வகையில் நடந்துகொள்ளும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

அரிசி வியாபாரிகள் சங்கத்தினரும் இதுதொடர்பாக என்னிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அரிசி வாங்குவதற்கு பணம் கொண்டு செல்கிறோம், அதற்கு எப்படி நாங்கள் ஆதாரம் காட்ட முடியும் என்று கேட்டனர். சமீபத்தில் அரிசி கொள்முதல் அல்லது விற்பனை செய்ததற்கான ரசீது போன்ற ஆதாரத்தை காட்டினால் போதுமானது. அரிசி வியாபாரி என்று ஏற்கனவே செய்துள்ள பதிவுக்கான ஆதாரத்தையும் காட்டவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.