தீபாவளி என்றால் இனிப்பு, மத்தாப்பு, புது ஆடை என்று பல்வேறு வகைகளில் நாம் மகிழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.
அம்மாக்கள் இனிப்புகளை செய்வதும், அதனை நாம் பல்வேறு வகைகளில் கிண்டலடிப்பதும் எல்லா வீடுகளிலும் நடக்கும் விஷயம்தான். மைசூர் பாக்கை செங்கலுக்கு இணையாக வர்ணிப்பதும், அதிரசத்தை சங்கு சக்கரமாக பாவிப்பதும் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதிதான்.
பல பள்ளிகளில் சற்று முன்பாகவே விடுமுறை தொடங்கிவிடுகிறது. குழந்தைகள் இன்றைய தினமே பட்டாசை வெடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு விடுமுறை ஆரம்பித்துவிட்டாலே தீபாவளி வந்துவிட்டதாக அர்த்தம்தானே.
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கோ இது தலை தீபாவளி. மாமியார் வீட்டில் மருமகனுக்கு தடபுடல் விருந்தோடு தலை தீபாவளி சிறப்பாக கழியும். வீட்டிற்கு வந்த மாமாவை மனைவியின் தங்கைகளும், சகோதரர்களும் ஏகபோகமாக கிண்டலடித்து சலித்துவிடும் இந்தத் தீபாவளி.
வயதானவர்களை விட, குழந்தைகளுக்குத்தான் இந்த தீபாவளி அதிகக் கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அவர்களுக்குத்தான் தீபாவளியில் முன்னுரிமை. ஆடை, பட்டாசு, இனிப்புகள் என எல்லாமே அவர்களுக்குத்தான். இப்படி இருக்க, பம்பரமாய் சுழன்று விளையாடும் பிள்ளைகளுக்கு தீபாவளி என்றாலே அது திருவிழாதானே.
கொண்டாட்டங்கள் அனைத்துமே மக்களுக்காக மக்களால் கொண்டுவரப்பட்டவைதான். நம் இயந்திரத் தனத்தை மாற்றிக் கொள்ள நம் மனங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கவ இந்த கொண்டாட்டங்கள் பிறந்தன. இவற்றை நாம் முழுமையாக அனுபவிக்க வேண்டும். தீபாவளியைக் கொண்டாட புத்தாடையோ, பட்டாசுகளோ மட்டும் போதாது. அதற்கு மேலும் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்கவே திண்டாடிப் போவார்கள். இந்த நிலையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் பிள்ளைகளை கொஞ்சம் மனதில் நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லோருமே அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் யாரேனும் ஒருவருக்கு தீபாவளியையொட்டி சிறு உதவியாவது செய்ய வேண்டும். நமது அண்டை அயலார்களில் எத்தனையோ ஏழை வீடுகள் இருக்கும். அதுபோன்ற குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆடையோ, பட்டாசுகளையோ வாங்கிக் கொடுத்து அவர்களது மகிழ்ச்சிக்கு தீபாவளி மட்டும் அல்ல நாமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வசதி படைத்தவர்கள், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அன்றைய தினத்திற்கு சிறப்பான உணவை அளிக்க ஏற்பாடு செய்யலாம். சோகத்தை பகிர்ந்து கொள்ளும் போது பாதியாகக் குறையும். அதுவே இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது அது இரட்டிப்பாகும்.
உங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், வறுமையில் வாழ்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது மகிழ்ச்சி அவர்களையும் தொற்றிக் கொள்ளட்டும்.
பரப்புவோம் மகிழ்ச்சியை. கொண்டாடுவோம் இனிய தீபாவளியை.