செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (13:03 IST)

அம்மாவோட ரூட்டுதான் சரி!? அதிரடியாக களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி! - அதிமுக ரொம்ப பிஸி!

Edappadi Palanisamy

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ள நிலையில் இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் களமிறங்கிவிட்டன. நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அவரது கட்சி செயல்பட்டு வருகிறது. தவெக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இப்போதிருந்தே தேர்தல் பணிகள் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டனர்.

 

இதனால் பிற கட்சிகளும் முந்தி கொண்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கி வருகின்றன. முக்கியமாக அதிமுக. கடந்த சட்டமன்ற தேர்தல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோல்வியை தழுவிய அதிமுக அதன் பின்னர் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. கடந்த சில ஆண்டுகளில் அதிமுக தலைமை குறித்து பல குழப்பங்கள் இருந்து வந்தபோதும் எடப்பாடி பழனிசாமி திறம்பட அவற்றை கையாண்டு கட்சியை கைக்குள் கொண்டு வந்துள்ளார். 

 

நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் ஏற்கனவே அதிமுக - திமுக - பாஜக என்ற மும்முனையில் உள்ள நிலையில் விஜய்யின் வருகை இதை நான்கு முனை போட்டியாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவும், தவெகவும் ஏற்கனவே ஆளும் திமுகவை விமர்சித்து தங்கள் அரசியலை ஆழப்படுத்தி வரும் நிலையில்தான் விரைவில் ஒரு மாநில அளவிலான சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi MGR

2006-2010  திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அந்நாளைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுகவுக்கு எதிரான தனது சுற்றுப்பயணத்தை செண்டிமெண்டலாக கோவையிலிருந்து தொடங்கினார். திமுகவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கோவையில் தனது தலைமையிலேயே நடத்தினார். அதனால் அன்று முதல் கோவையில் அதிமுக செல்வாக்கு உயர்ந்தது. மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவை மாவட்டத்திற்கு ஜெயலலிதா சிறப்பு கவனம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.

 

அதனால் அம்மா வழியில் எடப்பாடி பழனிச்சாமியும் கோவையிலேயே தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். கோவைக்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறியும், திமுக ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் அவர் மக்களிடையே பேச உள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிய உள்ளார். மேலும் அதிமுகவின் செல்வாக்கு பெற்ற இடமாக இருந்த கோவையில் தற்போது பாஜகவின் கைதான் ஓங்கியிருக்கிறது. எனவே பாஜகவை ஓரங்கட்டும் முனைப்பும் எடப்பாடியாரின் கோவை ஆர்வத்தில் உள்ளதாக தெரிகிறது. மேலும் பாஜக எம்.எல்.ஏக்களை பெற்ற தொகுதிகளில் அவர் பாஜகவை விமர்சித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சுற்றுப்பயணம் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்குவதாக இருந்த நிலையில் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதத்தில் அவர் தன் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வருகை தரும் இடங்கள், தேதி என அனைத்தும் அதிமுக தயார் செய்து மாவட்ட தலைமைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனராம். 2026ம் ஆண்டில் ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவினர் 100 சதவீதம் இப்போதே தங்கள் உழைப்பை வெளிப்படுத்த வேண்டும் என மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

 

Edit by Prasanth.K