ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : திங்கள், 8 ஜூலை 2019 (11:34 IST)

இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை: சர்ஃபராஸ்

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தால், பாகிஸ்தான் அரையிறுதிச் சுற்றுக்கு போக வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் ஆட்டத்தில் இந்தியா தோற்றதால், பாகிஸ்தானால் அரையிறுதிக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணி, பாகிஸ்தான் மீதுள்ள பகையை எண்ணி, இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கர் யுனிஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதனை குறித்து தற்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ், பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கக்கூடாது என்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி தோற்றதாக தான் கருதவில்லை எனவும், அவ்வாறு இந்திய அணி மீது வீண் பழி சுமத்துவது தவறான ஒன்று எனவும் கூறினார்.

இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் தோற்றதை குறித்து, சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தான் கிர்க்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் மீது பழி சுமத்தினர். அதற்கெல்லாம் சர்ஃபராஸ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.