வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (08:27 IST)

பான் கார்டுக்குப் பதில் ஆதார் – வருவாய் துறை அறிவிப்பு !

பான்கார்டு பயன்படுத்தும் இடங்களில் இனி ஆதார் கார்டுகளை பயன்படுத்தலாம் என்பதற்கு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு அனைத்து இந்திய மக்களுக்குமான அடையாள அட்டையாக ஆதார் கார்டை வழங்கி வருகிறது. எல்லாவிதமான பரிவர்த்தணைகளுக்கும் அரசு செயல்பாடுகளுக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆதாரின் மூலம் தனிமனிதனின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்  பான் கார்டு பயன்படுத்தும் இடங்களில் ஆதாரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை வங்கிகளில் ரூ.50,000க்கும் மேலான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. ஆனால் இனி ஆதார் தொடர்பான விவரங்களை வழங்கினால் போதுமானது.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே ’ ஆதார் அட்டையுடன் சுமார் 22 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் 120 கோடி ஆதார் அட்டைகள் நாட்டில் உள்ளன. அதனால் பான் கார்டு உபயோகிக்க வேண்டிய இடங்களில் ஆதாரை அனுமதிப்பது மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் பான் கார்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.