செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (08:32 IST)

ஐபிஎல் நடத்தணுமா? இங்க வாங்க! – தொடர்ந்து அழைப்பு விடுக்கும் நாடுகள்!

கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்த தொடர்ந்து பல நாடுகள் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் நிலவரம் தீவிரமடைந்து வருவதால் இதுவரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமலே உள்ளன. அதேசமயம் வேறு நாடுகளில் ஐபிஎல் நடத்துவது, பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இப்போதிருக்கும் பாதுகாப்பற்ற சூழலில் அதற்கு சாத்தியமில்லை என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஐபிஎல் போட்டிகளை நடத்த நியூஸிலாந்தும் அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல நாடுகள் அழைப்பு விடுத்தாலும் வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் என கூறியுள்ள பிசிசிஐ சகஜ நிலை திரும்பிய பிறகுதான் இதுகுறித்து முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளது.