யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.
அவருக்குத் துணையாக ஜோஸ் பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோரின் அதிரடி இன்னிங்ஸ்கள் அமைந்தன. இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் இலக்கைத் துரத்த முடியவில்லை. இந்த போட்டியில் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
போட்டி முடிந்ததும் பேசிய குஜராத் அணிக் கேப்டன் சுப்மன் கில் “போட்டி முடிந்ததும் யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வருமளவுக்கு எங்கள் அணி வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். ஒரு சிறந்த அணிக்கு இதுதான் முத்திரையான விஷயம். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தேவையான பங்களிப்பை அளித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.