வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:13 IST)

ஓய்வு பெற்றார் ஷிகர் தவான்.! சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.!!

Dhawan
சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.   
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், தொடக்க வீரர், கேப்டனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். வயது முதிர்வு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்து வருகிறார். 
 
இந்த நிலையில், இவர் இன்று சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  ஷிகர் தவான் இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார். 
 
ஷிகர் தவான் கடைசியாக 2018ம் ஆண்டு இந்தியாவிற்காக டெஸ்டில் விளையாடினார். 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியாவிற்காக விளையாடினார். 2021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடினார்.
 
தனது ஓய்வு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,  இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன என்றும் எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன் என்றும் கூறியுள்ளார்.


நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது என்றும் ஷிகர் தவான்  தெரிவித்துள்ளார்.