1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 2 மே 2024 (16:35 IST)

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை.! சென்னையில் 13 பேர் கைது..!

IPL Ticket
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளசந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,19,306 மதிப்புள்ள 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
 
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்தது.
 
அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக மதன் (20), ஜோசப் (27), ஜலாருதீன் (40), சசிகுமார் (22), கோகுலகிருஷ்ணன் (27), கார்த்திக்கேயன் (50), ரகமதுல்லா (40), விக்னேஷ் (28), கண்ணன் (30), பையாசுதீன் (33), பரத் (24), அர்ஜுன் (27), சிவயோகேஸ்வரன் (18), ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 13 நபர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.1,19,306 மதிப்புள்ள 33 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.