1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 15 மே 2024 (07:13 IST)

“இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கக் கூடாது… எப்பவும் எதிர்க்க சில பேர் இருப்பார்கள்” முன்னாள் இந்திய வீரர் கருத்து!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆனால் இதனால் பவுலர்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச அழைக்கப்படுவதும் குறைந்துள்ளது. இந்த விதிகுறித்து ரோஹித் ஷர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “இது தற்காலிகமான ஒன்றுதான். இதன் சாதக பாதகங்கள் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் முடிவுகள் எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இம்பேக்ட் ப்ளேயர் விதிக்கு முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள “காலத்துக்கு ஏற்ப நாமும் மாறவேண்டும். இம்பேக்ட் ப்ளேயர் விதியால் நிறைய போட்டிகள் சுவாரஸ்யமாக மாறியுள்ளன. கடந்த சீசனோடு இந்த சீசனை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த விதியால் நிறைய இந்திய வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. காலத்துக்கு ஏற்ப நாம் விதிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மற்ற விளையாட்டுகளிலும் இதுபோல மாற்றம் நடந்துள்ளது. எப்போதும் புதியவைகளுக்கு எதிராக குரல் கொடுக்க சிலர் இருக்கதான் செய்வார்கள்” எனக் கூறியுள்ளார்.