1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:04 IST)

ரஹானேவை ஒதுக்கி விட்டதே அவர்தான்! தோனியின் மறுபக்கம்? – ஷேவாக் அதிர்ச்சி தகவல்!

Dhoni Rahane
ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தேர்வாகியுள்ள ரஹானே சிறப்பாக விளையாடியுள்ள நிலையில் அவர் குறித்தும், தோனி குறித்தும் ஷேவாக் பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த போட்டியில் மூன்றாவது இடத்திலேயே அஜிங்கியா ரஹானே பேட்டிங் இறக்கப்பட்டார். ஆனால் இதுவரை ரஹானேவின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இருந்திராத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் மும்பையில் வளர்ந்த வீரரான ரஹானேவுக்கு வான்கடே மைதானம் எளிதாக இருந்ததால் அனைவரது அவநம்பிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் என விளாசி அவுட்டே ஆகாமல் 61 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.


ரஹானேவை புகழ்ந்த பலரும், ரஹானேவின் திறமையை சரியாக புரிந்து கொண்டு சரியான நேரத்தில் களத்தில் கேப்டன் தோனி இறக்கி இருக்கிறார் என தோனியையும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் “ரஹானே மெதுவாக விளையாடுகிறார். அவரால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியவில்லை என சொல்லி அவரை ஒருநாள் போட்டிகளில் சேர விடாமல் செய்ததே தோனிதான். ஆனால் இப்போது சென்னை அணிக்கு அனுபவம் தேவை என தோனியே ரஹானேவை அணியில் எடுத்துள்ளார்” என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K