“நாங்க ஜெயிச்சதே இந்த விதியால்தான்… இனி 150, 160 எல்லாம் வேலைக்கு ஆகாது” – பேட் கம்மின்ஸ் கருத்து!
ஐபிஎல்-2024 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்றைய 23 ஆவது போட்டியில், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 21 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 64 ரன்னும், அப்துல் சமட் 25 ரன்னும், சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி வரை போராடி 180 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷஷாங்க் 25 பந்துகளில், 46 ரன்களும், அஷுடோஷ் ஷர்மா 15 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்ததன் மூலம் போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்றது.
இந்த திரில்லான வெற்றிக்கு பிறகு பேசிய ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் “தொடக்கத்தில் பஞ்சாப் அணி பவுலர்கள் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு 182 ரன்கள் சேர்த்தோம். இம்பேக்ட் ப்ளேயர் விதியால் ஒவ்வொரு அணியும் பேட்டிங்கை பலப்படுத்திக் கொள்கின்றன. இனிமேல் 150, 160 அடிக்கும் போட்டிகளில் எல்லாம் பத்தில் ஒன்பது போட்டிகளை நாம் இழக்க நேரிடலாம்.” எனக் கூறியுள்ளார்.