கடைசி வரை போராடி பரிதாபமாக தோற்ற மும்பை இந்தியன்ஸ்! – டெல்லி அணி த்ரில் வெற்றி!
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு செய்தும் ரன்களை கட்டுப்படுத்த தவறியது. ஓபனிங் பேட்ஸ்மேனான ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் 27 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை விளாசி 84 ரன்களை குவித்தார். இதனால் அணியின் ரன் சரசரவென எகிறிய நிலையில் தொடர்ந்து வந்த அபிஷேக் பொரெல் (36), ஷாய் ஹோப் (41), ரிஷப் பண்ட் (29), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (48) ரன்களை குவிக்க அணியின் ரன்கள் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஆக ஆனது.
இந்நிலையில் 258 ரன்களை டார்கெட்டாக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்தடுத்து இஷான் கிஷன் (20), சூர்யகுமார் யாதவ் (26) அவுட் ஆனார்கள். திலக் வர்மா கடைசி வரை நின்று விளையாடி 63 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். இடையே ஹர்திக் பாண்ட்யா அடித்த் 46 ரன்கள், டிம் டேவிட்டின் 37 ரன்கள் அணியின் டார்கெட்டுக்கு உதவியது.
கடைசி ஓவரில் திலக் வர்மா ரன் அவுட் ஆகாமல் நின்று விளையாட முயன்றிருந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால் பேட்டிங்கிற்குள் நுழைவதற்காக அவசரமாக ஓடி வந்து அவர் ரன் அவுட் ஆனதுமே போட்டியில் நம்பிக்கை போனது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 247 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் மும்பை அணியின் ப்ளே ஆப் கனவும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
Edit by Prasanth.K