இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!
நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, தங்கள் அதிரடி ஆட்டத்தை ஆடமுடியாமல் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களும் விக்கெட்களை இழக்க அந்த அணி தடுமாறியது. இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த இலக்கை துரத்தி ஆடிய கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 14 ஆவது ஓவரிலேயே வெற்றியைப் பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்திய கே கே ஆர் பவுலர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரின் ஆரம்ப போட்டிகளில் அவர் விக்கெட்களும் எடுக்காமல் ரன்களையும் அதிகமாகக் கொடுத்து சொதப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “எங்களுக்கு பவர்ப்ளே ஓவர்கள் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பவர்ப்ளேயில் ஆதிக்கம் செலுத்தி வந்தோம். டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடினர். அவர்களுக்கு இடம் கொடுக்காமல் பந்துகளை ஸ்டம்புகளில் போடவேண்டும் என முடிவு செய்தோம். அதிர்ஷ்டவசமாக இருவரின் விக்கெட்களையும் விரைவாகக் கைப்பற்றினோம். எங்கள் பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக செயல்பட்டது. எந்த தனிநபரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.