திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (07:18 IST)

ஸ்டாய்னஸின் அபார சதத்தால் கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி… புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவுக்கு பின்னடைவு!

ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டி கடைசி பந்து த்ரில்லராக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். மற்றொரு வீரரான ஷிவம் துபே 27 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். இந்த கடினமான இலக்கைத் துரத்திய லக்னோ அணி ஆரம்பத்தில் திணறினாலும் பின்னர் சுதாரித்தது.

அந்த அணியின் மார்கஸ் ஸ்டாய்னஸ் அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீரரான நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்ததும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

இவர்களின் அதிரடியால் லக்னோ அணி 20 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. இந்த தோல்வியால் சி எஸ் கே அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.