1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2025 (06:49 IST)

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்த போதும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

இதன் பின்னர் ஆடவந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது.  அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.

கடந்த சீசனில் லக்னோ அணியில் கேப்டனாக இருந்த கே எல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தினார் கோயங்கா. இது சம்மந்தமான ஒரு வீடியோக் காட்சி கூட இணையத்தில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதன் காரணமாகவே லக்னோ அணியில் இருந்து விலகினார் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.