கிரிக்கெட் க்ரவுண்டுல எட்டு போட்ட கோஷ்டி.. நம்ம கோஷ்டிதான்! – கலாய் வாங்கும் ஜோர்டன்
நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில் கடைசி ஓவரில் நடந்த சம்பவங்கள் வைரலாகியுள்ளன.
நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் தேர்ந்தெடுத்த ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 176 ரன்களை ஈட்டி 177ஐ இலக்காக நிர்ணயித்தனர். தொடர்ந்து களம் இறங்கிய கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் ஆரம்பம் முதலே சிறப்பாய் விளையாடி வந்தது. கடைசி ஓவரின் கடைசி பந்துக்கு முன்னால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 175 ஆக இருந்தது. கடைசி பந்தை பேட்டிங் செய்த ஜோர்டன் – பூரன் கூட்டணி இரண்டு ரன்களை ஈட்டி வெற்றி பெற முயற்சித்தனர்.
முதலாவது ரன் ஓடிவிட்டு திரும்ப பேட்டிங் பிட்ச் ஓடி வந்த ஜோர்டன் நேராக ஓடி வராமல் வளைந்து பிட்சை விட்டு வேறுபக்கமாக ஓடி பிட்சை அடைந்ததால் ரன் அவுட் ஆனார். நேராக அவர் ஓடி வந்திருந்தால் ரன் அவுட் ஆகியிருக்க மாட்டார் என்பதோடு சூப்பர் ஓவர் சென்றிருக்க தேவையும் இருந்திருக்காது.
நல்ல வேளையாக சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் அணியே வென்றது. ஒருவேளை சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் தோல்வி அடைந்திருந்தால் மொத்த பழியும் ஜோர்டன் மீதுதான் விழுந்திருக்கும், இதை நகைச்சுவையாக ட்ரோல் செய்யும் கிங்ஸ் லெவன், ராகுல் ரசிகர்கள் “ஐபிஎல் வரலாற்றிலேயே கிரிக்கெட் மைதானத்தில் எட்டு போட்ட கோஷ்டி.. நம்ம கோஷ்டிதான்” என கூறியுள்ளனர்.