ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (14:58 IST)

ஐபிஎல் செயல் அதிகாரி ராஜினாமா - சூதாட்ட புகார் எதிரொலி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது சூதாட்ட புரோக்கர்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் செயல் அதிகாரி சுந்தர் ராமன் ராஜினாமா செய்துள்ளார்.
 

 
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோர் மீது பரபரப்பு புகார் எழுந்ததை அடுத்து அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
பின்னர், இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கடந்த ஜூலை மாதம் விடுதலை செய்தது.
 
மேலும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
 
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 ஆண்டு காலம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
 
மேலும், முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில், ஐ.பி.எல். தொடரின்போது சூதாட்ட தரகர்களை சுந்தர் ராமன் 8 முறை தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டிருந்தது. கிரிக்கெட் சூதாட்டத்தில் அவருக்குள்ள பங்கு தொடர்பாக மேலும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த சுந்தர் ராமன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை ஐபிஎல்-இன் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.