மரணக் காட்டு காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்… ஆஸிக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி முதலில் பேட் செய்ய தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லும், மூன்றாவதாக இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். அடுத்து வந்த கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதமடிக்க, இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்த்து. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் இதுவாகும்.
இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணியும் அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. ஆனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் போட்டியில் மழை குறுக்கிட போட்டி 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 317 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸி அணி 217 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி அணி இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோற்று ஒருநாள் தொடரை இழந்தது.