ஷமியின் அபார பவுலிங்… பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டம் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று மொஹாலியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி அணி முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷை இழந்தது.
அதன் பின்னர் டேவிட் வார்னர் ஸ்டிவன் ஸ்மித் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. அதன் பின்னர் சீரான் இடைவெளிகளில் விக்கெட்களை இந்திய அணி வீழ்த்தியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் சேர்த்தது ஆஸி அணி. இந்தியா தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ருத்துராஜ் மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்து அவுட் ஆக, பின்னர் வந்த கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் சேர்த்தார். வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்த முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.