திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (19:42 IST)

கோட்டை விட்ட இந்தியா – இறுதி போட்டிக்கு நியூஸிலாந்து

இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இந்தியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து.

நியூஸிலாந்தை சரியாக கவனிக்க தவறிவிட்டது இந்தியா என்றே கூறவேண்டும். நேற்று ஆட்டத்தில் நியூஸிலாந்தை பந்துவீச்சால் ஆரம்பத்தில் திணறடித்தாலும் நிதானமாக விளையாடியது நியூஸிலாந்து. மழைகாரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று தொடங்கியது.

50 ஓவர்கள் முடிவில் 239 ரன்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது நியூஸிலாந்து. 240 ரன்கள் இந்தியாவுக்கு பெரிய இலக்கு இல்லையென்றாலும் நியூஸிலாந்தின் வலிமையான பந்துவீச்சை இந்தியா கணிக்க தவறிவிட்டது. இந்திய ரசிகர்களால் இன்று இரட்டை சதம் அடிப்பார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா ஒரே ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த ஓவரில் கேப்டன் விராட் கோஹ்லியும் ஒரே ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். இந்திய ரசிகர்களுக்கு இமையமே சரிந்தது போலாகி விட்டது.

ராகுலாவது சமாளித்து நன்றாக ஆடுவார் என எதிர்பார்த்தால் அவரும் அதே ஒரு ரன் எடுத்து மூன்றாவது ஓவரில் அவுட் ஆனார். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் இந்தியாவின் மாஸ்டர் ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே இந்தியாவின் தோல்வி ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது.

பிறகு விளையாடிய தினேஷ் கார்த்திக் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். டி20 போல கடைசி நேரத்தில் காப்பாற்றுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா நிதனமாக விளையாடி ஆறுதலான ஆட்டத்தை தந்தார்கள். அதற்கு பிறகு விளையாடிய டோனி, ஜடேஜா இருவரும் வெற்றி வாய்ப்பை நெருங்கி வந்தனர்,. சோர்ந்து போன ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தனர்.

டோனி 1 சிக்ஸரும், ஜடேஜா 4 சிக்ஸரும் அடித்து வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தினர்,. ஜடேஜா ஒரு அரை சதமடித்தார். டோனி அரை சதமடிக்க ஒரு ரன் இருந்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜாவும் அவுட் ஆக அடுத்து புவனேஷ் குமார், பும்ராவால் என்ன செய்திட முடியும். 49.3 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா. இது இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அடியாக இருக்கிறது.