ரோஹித், கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்… ஹர்பஜன் சிங் பதில்!
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அந்த வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஒய்வை அறிவித்துவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவார்கள் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய பயிற்சியாளர் கம்பீர, கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பேசினார். அதில் “கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் உலகத் தரமான வீரர்கள். அவர்கள் இப்போதும் ஃபார்முடன் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் சிறப்பாக பங்களிப்பார்கள். உடல்தகுதியுடன் இருந்தால் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாடலாம்” எனக் கூறியிருந்தார்.
தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும், கோலிக்கு 35 வயதும் ஆகிறது. அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட்டை விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “ரோஹித் ஷர்மா 2 ஆண்டுகள் விளையாடுவார். ஆனால் கோலி அவரின் பிட்னெஸ் காரணங்களால் இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாடுவார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.