கம்பீரை ப்ரஸ் மீட்டில் பேசவே விடக்கூடாது… முன்னாள் இந்திய வீரர் கண்டனம்!
இந்திய அணியின் சமீபத்தைய தோல்விகளால் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்வது புதிய பயிற்சியாளர் கம்பீர்தான். கம்பீர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கிலும், தற்போது நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும் தோற்று சொதப்பியுள்ளது.
அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது இந்திய அணிக்கு புதிய மீட்பராக இருப்பார் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தோல்விகள் அதை உடைத்துள்ளன. மேலும் இப்போது கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கம்பீர் தோல்விகள் தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பது போல பேசியிருந்தார். அவரது பேச்சில் ஒரு திமிர்த்தனம் தெரிவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கம்பீரின் பேச்சு குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் “கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை பார்த்தேன். அவரை இனிமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேச வைக்காமல் இருப்பதே நல்லது. அவருக்கு செய்தியாளர்களிடம் பேசும்போது சரியான வார்த்தை உபயோகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ரோஹித் மற்றும் அகார்கர் ஆகிய இருவர் மட்டும் செய்தியாளர்களை சிறப்பாகக் கையாள்கிறார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.