திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (23:15 IST)

எம்ஜிஆர் மாதிரி 3 அடி வாங்கிட்டு திரும்ப அடிப்போம்..! – மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றி!

Mumbai Indians
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.



ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த சீசனில் முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் போட பேட்டிங்கில் இறங்கிய மும்பை அணி ஆரம்பமே அதிரடி காட்டத் தொடங்கியது. ரோகித் சர்மா 49 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் அணியில் மீண்டும் இணைந்த சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சிகரமாக டக் அவுட் ஆனார். ஆனால் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (39 ரன்கள்), டிம் டேவிட் (45 ரன்கள்), ரொமெரியோ ஷெப்பட் 39 ரன்கள் குவித்து 20 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோரை 234 ஆக நிலை நிறுத்தினர்.


235 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தது. டேவிட் வார்னர் 10 ரன்களில் அவுட் ஆனாலும், ப்ரித்வி ஷா (66 ரன்கள்), அபிஷெக் பொரெல் 41 ரன்கள், ட்ரிஸ்டர் ஸ்டப்ஸ் 71 ரன்கள் என அதிரடி காட்டினர். ஆனால் ஸ்டப்ஸுக்கு பின்னர் வந்தவர்களால் அதிரடியாக ஆட முடியாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது டெல்லி.

மும்பையின் இந்த வெற்றியை தொடர்ந்து “நாங்க எம்ஜிஆர் மாதிரி 3 அடி வாங்கிட்டுதான் திரும்ப அடிப்போம்” என மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இனி தொடர்ந்து மும்பை அணி ஏறுமுகத்தில் பயணிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K