செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (07:48 IST)

எங்கள் பவுலர்களின் மன உறுதியையே அசைத்து விட்டார்கள்… தோல்விக்குப் பின் ஆர் சி பி கேப்டன்!

ஐபிஎல் 17 ஆவது சீசனின் 10 ஆவது போட்டி நேற்று சின்னச்சாமி ஸ்டேடியம் பெங்களுருவில் நடக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது.

அதன்படி களமிறங்கிய பெங்களுரு அணியில் ஒருபுறம் கோலி நிலைத்து நின்று விளையாடினாலும் மற்றொரு புறம் வீரர்கள் விக்கெட்களை இழந்ததால் அவரால் அதிரடியாக விளையாட முடியாமல் நிதானமான ஆட்டத்தையே விளையாட வேண்டிய சூழல் உருவானது. அவர் 59 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து இந்த இலக்கைத் துரத்த களமிறங்கிய கே கே ஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் என ரன்ரேட் சென்றது. அதன் பின்னர் வந்த வீரர்களும் அந்த வேகத்தை தொடர 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது.

இந்த தோல்விக்குப் பின் பேசிய ஆர் சி பி கேப்டன் ஃபாஃப் டு ப்ளசிஸ் பேசும்போது “பவர் ப்ளே ஓவர்களில் அவர்கள் ஆடிய விதம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. அதுமட்டுமில்லாமல் எங்கள் பவுலர்களின் மன உறுதியையும் அசைத்து விட்டது. நரேன் இருக்கும் போது பவர்ப்ளேயில் சுழல்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைக்க முடியாது. இம்பேக்ட் ப்ளேயராகக் கொண்டு வரப்பட்ட வைஷாக் விஜயகுமார் சிறப்பாக பந்துவீசியது எங்களுக்கு பாசிட்டிவ்வாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.