1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 25 ஜூன் 2016 (17:30 IST)

இலங்கையை வதம் செய்த தொடக்க வீரர்கள் - இங்கிலாந்து சாதனை வெற்றி

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
 

 
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி ’டை’யில் முடிவடைந்த நிலையில் நேற்று 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
 
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பர் சண்டிமால் 52 ரன்களும், உபுல் தரங்கா 53 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 44 ரன்களும் எடுத்தனர்.
 
இங்கிலாந்து தரப்பில் பிளங்கெட் மற்றும் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 112 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 133 ரன்களும் குவித்தனர். இறுதியில், இங்கிலாந்து 34.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்தனர்.
 
இதன் மூலம் தொடக்க ஜோடி ஒன்று அதிக ரன்களை துரத்தி பிடித்ததில் இங்கிலாந்து தொடக்க ஜோடி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 236 ரன் எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
 
இந்த சாதனையை இங்கிலாந்து முறியடித்துப் புதிய சாதனை படைத்தது. மேலும், இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.