ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (08:40 IST)

அதிசயம்.. ஆனால் உண்மை! டெல்லி அணி முதல் வெற்றி! – சாத்தியமானது எப்படி?

David Warner
பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றியே பெறாமல் வெற்று அணியாக இருந்து வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றுள்ளது.

செல்வந்தராய் இருந்து நொடித்து போன ஆட்களை பார்த்து ‘ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன்’ என்பார்கள். அந்த வார்த்தை ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் பொருந்தும். இதுவரை ஒருமுறை கூட இறுதி போட்டி வரை சென்று சாம்பியன் ஆகா விட்டாலும் கூட ஒவ்வொரு சீசனிலும் அதீதமான முயற்சி காட்டும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ். சிலமுறை அரையிறுதி, இறுதி போட்டிகள் வரை கூட வந்து தோற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த சீசனில் சரியான ப்ளேயர்ஸ் பேக்கப் டெல்லி அணிக்கு அமையவில்லை. ரிஷப் பண்ட், டெவிட் வார்னர் போன்ற மெயின் ப்ளேயர்களை நம்பியே டிசி இருந்தது. ரிஷப் பண்ட் விபத்து காரணமாக இந்த சீசனில் விளையாடாத நிலையில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

KKR


ஆனால் கடந்த 5 போட்டிகளில் ஒன்றில் கூட டிசி வெற்றிபெறவில்லை. இந்நிலையில்தான் நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முக்கியத்துவம் பெற்றது. இதற்கு முன்னர் கொல்கத்தா அணியின் ஆட்டத்தை பார்க்கும்போது இதில் டிசி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

ஆனால் டாஸில் டிசி வென்று பவுலிங் எடுத்தபோதே அதற்கு சுக்கிரதிசை தொடங்கி விட்டது. கொல்கத்தா அணியின் ஜேசன் ராய் நின்று அடித்து ஆடினாலும், அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து மற்ற வீரர்களால் நிற்க முடியவில்லை. டெல்லி அணியின் இஷான்ந்த் சர்மா, முகேஷ் குமார், நோர்ட்ஜெ, அக்‌ஷட் பட்டேல், குல்தீப் யாதவ் என அனைத்து பவுலர்களும் அடுத்தடுத்து கொல்கத்தா விக்கெட்டுகளை அடித்து தூக்கினர்.

Rana


10 ஓவர்களுக்குள் 100 ரன்களை கூட தாண்ட முடியாமல் திணறிய கொல்கத்தா 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.  அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் வார்னர் நின்று நிதானமாக விளையாடி 57 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து வந்தவர்களில் மணிஷ் பாண்டே (21), அக்‌ஷர் படேல் (19) எடுத்து அணியை வெற்றிக்கு முன்னகர்த்தினர். 6 விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசி ஓவரில் 4 பந்துகளை மிச்சம் வைத்து 128 ரன்களை குவித்து வெற்றி பெற்றது டெல்லி அணி.

குறைந்த ஸ்கோர்தான் என்றாலும் இதை எட்டிப்பிடிக்கவே டெல்லி அணி திணறியது தெரிந்தது. டெல்லியின் பவுலிங் இந்த போட்டியில் சிறப்பாக அமைந்ததால் ரன்ரேட்டை குறைத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்களிலும் டெல்லி தனது பவுலிங்கை நம்பிதான் களமிறங்க வேண்டியுள்ளது.

Edit by Prasanth.K