உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இப்போது தெரிந்து விட்டதா? - விராட் கோலி
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யாரென்ற விவாதம் இப்போது முடிவிற்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்று பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை [24-05-16], பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஐபிஎல் போட்டியின் முதல் தகுதிச் சுற்றுப்போட்டி குஜராத் - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில், முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது.
பின்னர், களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி (டக் அவுட்), கெய்ல் (9), கே.எல். ராகுல் (0), வாட்சன் (1), சச்சின் பேபி (0) என அடுத்தடுத்து வெளியேற தனி ஆளாக நின்று போராடிய டி வில்லியர்ஸ் 47 பந்துகளில் [5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 79 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் வெற்றிக்குப் பின் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, “நம்பவே முடியவில்லை. நான் வெற்றிகரமான கேப்டன் என்பதை என்னால் நம்ப இயல்வில்லை.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்று எண்ணற்ற விவாதங்கள் எழுந்தன. அதற்கு முடிவு தெரிந்துவிட்டது. [டி வில்லியர்ஸை அவ்வாறு குறிப்பிட்டார்]. இனிமேல் இந்த கேள்வி எழாது.
இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளோம். பெரிய மனிதர் எங்களை அடுத்தபடிக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவருக்கு நான் தலை வணங்குகிறேன். நான் பார்த்ததில் அழுத்தத்தோடு விளையாடிய போட்டிகளில் அநேகமாக எனது சிறந்த ஆட்டமாக இருக்கலாம்.
டி வில்லியர்ஸுடன் இணைந்து ஆட்டத்தை எடுத்துச் சென்ற அப்துல்லாவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக அவர் அணிக்கு உந்துதலாக இருப்பார். அவருக்காக நான் மகிழ்ச்சியில் உள்ளேன். மொத்த அணிக்காகவும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.