திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (00:05 IST)

ஸ்டம்ப் இருந்தாதானே விளையாடுவீங்க.. உடைத்து தள்ளிய அர்ஷ்தீப் சிங்! – உடைந்து நொறுங்கிய மும்பை அணி!

Harshdeep singh break the stumps
இன்று நடந்த மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணி இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் பெரிய சம்பவம் செய்து வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடந்து முடிந்துள்ள பஞ்சாப் – மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி பலரது பிபியை எகிற செய்திருக்கும் என்றால் அது மிகையல்ல. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஒவ்வொருத்தரும் கொஞ்சம் கொஞ்சமாக சொற்ப ரன்களை சேர்த்து வர பின்னால் களம் இறங்கிய ஹர்ப்ரீத் சிங் (41), சுட்டிக்குழந்தை சாம் கரண் (55) என அடித்து அணியின் ஸ்கோரை 214 ஆக உயர்த்தினர்.

அடுத்ததாக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் ஷர்மா 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் விளாசி 44 ரன்கள் வரை குவித்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் நின்று விளையாடி அரைசதத்தை தாண்டினார். சூர்யகுமார் யாதவும் இன்று சிறப்பாக விளையாடி அரை சதம் வீழ்த்தினார்.

மும்பை அணி வெல்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்த நிலையில் 15வது ஓவரில் தூக்கப்பட்ட கேமரூன் க்ரீனின் விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 17வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் சூர்யகுமாரின் விக்கெட்டை தூக்கி அதிர்ச்சியை கொடுத்தார். அதிர்ச்சி அத்தோடு நிற்கவில்லை.

19வது ஓவரில் மீண்டும் அர்ஷ்தீப் சிங் பவுலிங் வந்தபோது மும்பை அணிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. முடிக்கக் கூடிய டார்கெட்தான் என்றாலும் அர்ஷ்தீப் சிங்கின் அசுர பந்து வீச்சு மும்பை பேட்ஸ்மேன்களை திணற செய்தது. திலக் வர்மாவை 19.3வது பந்தில் ஸ்டம்ப் அவுட் செய்தார் அர்ஷ்தீப் சிங். அவர் வீசிய வேகத்தில் பந்து ஸ்டம்பில் பட்டு மிடில் ஸ்டம்ப் உடைந்து போனது.

அதை ஒட்டவைத்து மறுபடி ஆட்டம் தொடர்ந்தது. அப்போது அடுத்த பந்திலேயே இம்பேக்ட் ப்ளேயர் வதேராவின் விக்கட்டை நடு ஸ்டம்பில் அடித்து தூக்கினார் அர்ஷ்தீப் சிங். இந்த முறை நடு ஸ்டம்ப் தெரித்து பறந்து சென்று விழுந்தது. அர்ஷ்தீப்பின் அசுரத்தனமான பவுலிங் மும்பை திக்குமுக்காட செய்யவே 20 ஓவர் முடிவில் 201 ரன்களே பெற்று தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் நினைவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஸ்ட்ம்பை உடைத்து ரெக்கார்ட் செய்துவிட்டார் அர்ஷ்தீப் சிங்.