1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (13:36 IST)

யாத்திசை: சினிமா விமர்சனம் - சோழர், பாண்டியர் போர் வரலாறுக்கு வடிவம் கொடுத்த படம்

BBC
ஏழாம் நூற்றாண்டில் நடந்த பாண்டியர்களுக்கும், சேரர்களுக்கும் இடையிலான போரில் பாண்டியர்கள் வெற்றி பெற்று, சேரர்களை நாடு கடத்துகின்றனர். அதோடு, சேரர்களுக்கு உதவி புரிந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாக, சிறு குழுவான எயினர்கள் பாலை நிலத்திற்கு விரட்டப்படுகின்றனர்.

பின்னர், அக்குழுவைச் சேர்ந்த கொதி, சோழர்கள் உதவியுடன் பெரும்படை திரட்டி, பாண்டிய அரசன் ரண தீரனுடன் போர் புரிய, வென்றது யார்? என்பதை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘யாத்திசை’ இன்று வெளியாகியிருக்கிறது.

தரணி இராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’யாத்திசை’ திரைப்படத்தில் சேயோன், ஷக்தி மித்ரன், ராஜலக்‌ஷ்மி, சந்திரகுமார், செம்மலர் அன்னம், வைதேகி, சமர் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு, சக்ரவர்த்தியின் இசையமைப்பு, ரஞ்சித்குமாரின் அரங்க அமைப்பு, ஓம் சிவ பிரகாஷின் சண்டை வடிவமைப்பு ஆகியவை படத்தை பார்வையாளனுக்குள் கடத்த பெரிதும் முனைந்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலரே படம் மீது கவனத்தை குவிக்க, தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படத்தை 'தரமான படைப்பு' என பல்வேறு ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிட்டிருக்கின்றன.

இந்து தமிழ் திரை நாளிதழ், அதிகாரத்தை அடைய பேரரசை எதிர்க்கத் துணியும் சிறு இனக்குழு ஒன்றினால் நடத்தப்படும் போராட்டத்தின் ரத்த வாடைதான் ‘யாத்திசை’ எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகளும் துரோகங்களுமாகவும் அல்லது இரு பெரும் பலம்பொருந்திய அரசப்படைகளுக்கு இடையிலான சண்டைகளாகவுமே வரலாற்று புனைவு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், எயினர் குடி என்ற சிறிய இனக்குழு ஒன்று அதிகாரம் பொருந்திய பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி இராசேந்திரன்.

பிரமாண்டத்துக்கு குறைவில்லை

மூளும் போர்களுக்கும், வீழும் உயிர்களுக்கும், அரச மமதைக்கும் அடிப்படை ‘அதிகாரம்’ தான். அரசுகள் மாறக்கூடியது. அதிகாரம் மட்டுமே நிலையானது என்பதை நிறுவுகிறது படம். கதை கோரும் பிரமாண்டத்தையும், அதற்கேற்ற காட்சியமைப்பையும் எந்த சமரசமுமின்றி பதிவு செய்த விதம் ‘யாத்திசை’ களத்தை சுவாரஸ்யமாக்குவதாக அதன் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, எயினர் குல கடவுள் கொற்றவைக்கான சடங்குகளும், உயிர் பலி கொடுக்கும் முறையும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. அது போலவே பழந்தமிழரின் மொழியை கூடுதல் சிரத்தையுடன் பதிவு செய்திருந்தது, அம்மக்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலை துணிக்கு பதிலாக ஆபரணம் மற்றும் நகைகளால் மூடியிருப்பது, தேவரடியார் முறையின் அவலம். பேரரசு தொடங்கி சிறு இனக்குழு வரை ஆணாதிக்க சமூகமாக இருந்ததை காட்சிப்படுத்தியிருந்த நுணுக்கமான அணுகுமுறை கவனிக்க வைக்கிறது.
Yaathisai

சில இடங்களில் சிஜி காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் எயினர் சமூகத்துக்கான வழக்கொழிந்த மொழியை பதிவு செய்திருப்பது கதைக்கு எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பது கேள்விக்குறி. காரணம் அவர்கள் பேசும் காட்சிகளில் ஒவ்வொருமுறையும் சப்டைட்டில் பார்க்கும் உணர்வு மேலோங்குகிறது.

‘அதிகாரம்’ தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை வெறும் வசனங்களாக சொல்லியிருந்ததும், அதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாததும் பலவீனம். இப்படிச் சில குறைகள் இருப்பினும், புது வகையான திரையனுபவத்தை யதார்த்தமான காட்சிகளுடன் சொல்ல முனைத்திருக்கும் விதத்தில் ‘யாத்திசை’ கவனம் பெறுவதாக இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று புனைவு ’யாத்திசை’ என பாராட்டியிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ். அதோடு, பெரும் பொருட்செலவும், பிரபலமான நடிகர்களும் வரலாற்று படங்களுக்கு அவசியம் என்கிற மாயையையும் இயக்குநர் தரணி இராசேந்திரன் உடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இது சேர்ந்திருந்தால் படத்துக்கு கூடுதல் 'வெயிட்டேஜ்'

இந்தப் படம் நிச்சயமாக ஒரு கவனம் ஈர்க்கும் படைப்புதான், அதே நேரம் இன்னும் கொஞ்சம் மோதலும், உணர்ச்சியும் திரைக்கதையில் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் உயரத்தில் வைத்து கொண்டாடப்பட்டு இருக்கும் எனவும் யாத்திசை படத்தை புகழ்ந்திருக்கிறது.

தினமலர் நாளிதழ், குறைவான பட்ஜெட்டில் பிரமாண்டமான உருவாக்கத்தை தந்திருக்கிறது யாத்திசை படக்குழு என குறிப்பிட்டு விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறது. சேர, சோழ, பல்லவர்களை விரட்டியடித்து தென் தமிழகத்தை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறார் பாண்டிய மன்னன் ரணதீரன்.

அவரால் விரட்டியடிக்கப்பட்ட எயினர்கள், தங்கள் நிலைகண்டு கொதித்தெழுகின்றனர். அந்தக் கூட்டத்தின் தலைவன் கொதி, ரணதீரனை வென்று காட்டுவேன் என சபதமேற்று, சோழர்களை துணைக்கு அழைத்து கொண்டு செல்கிறான்.

படக்குழு முயற்சிக்கு பாராட்டு

அதன்பின் நடக்கும் சம்பவங்களை அடுக்கி திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குநர் தரணி இராசேந்திரன் என விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ள தினமலர், மிக நீளமான கொற்றவை பலி காட்சி, பெரும்புள்ளிகள் கூட்டத்துடனான ரணதீரனின் பேச்சுவார்த்தை ஆகிய காட்சிகள் படத்தின் வேகத்தை தணிப்பதாகவும், இதுபோன்ற சில குறைகளை அடுத்த பாகத்தில் தவிர்க்கலாம், மற்றபடி படக்குழுவினரின் உழைப்புக்கும், முயற்சிக்கும் பாராட்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் படைப்பு ‘யாத்திசை’ என தி இந்து படத்தை விமர்சனம் செய்துள்ளது.

வரலாற்று புனைவு என்பதால் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துடன் யாத்திசை படத்தை ஒப்பிட்டு, பிரமாண்டத்தில் வேறுபாடு இருந்தாலும் காட்சியைமைப்புகளிலும், கதையம்சத்திலும் ‘யாத்திசை’ தரமான படம் என குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ‘யாத்திசை’ படத்தை உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்ற ‘300’ படத்தின் இந்திய படைப்பு எனவும் பாராட்டியிருக்கிறது தி இந்து. படத்தொகுப்பும், இசையும் படத்தின் கதையோட்டத்துடன் ஒன்றாமல் இருப்பது படத்திற்கு பெரும் பலவீனம் எனவும் அதன் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.