திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 29 மே 2023 (10:29 IST)

வீதியில் இழுத்துச்செல்லப்பட்ட மல்யுத்த வீராங்கனை - ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது?

தொலைக்காட்சித் திரையில் ஒளிப்பரப்பான காட்சிகள்: இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோதி, பூஜை, அர்ச்சனைகளில் பங்குகொள்கிறார். மக்களவையில் அரச தர்மத்தின் சின்னமான செங்கோலை நிறுவுகிறார்.
 
சுமார் 3 மணி நேரம் கழித்து, 11:15 மணிக்கு
 
இடம்: புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஜந்தர் மந்தர்.
 
காட்சிகள்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மல்லிக்கை பெண் காவலர்கள் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். தேசிய கொடிகளை ஏந்தியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் பேருந்துகளில் ஏற்றுகின்றனர்.
 
2023 மே 28 ஆம் தேதியின் நிகழ்வுகள் அனைத்தும் இந்த இரண்டு காட்சிகளில் அடங்கிவிட்டன.
 
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களின் பக்கத்தில் போவது எளிதான காரியம் அல்ல. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் சாலை காலையிலிருந்து மூடப்பட்டது. பல ஊடகவியலாளர்களும் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
எப்படியோ கஷ்டப்பட்டு போராட்டம் நடந்த இடத்திற்கு அருகில் நான் சென்றபோது, ​​ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் போலீஸ் முகாமாக மாறியிருப்பதைக் கண்டேன். நூற்றுக்கணக்கான டெல்லி காவல்துறையினர் மற்றும் விரைவு அதிரடிப் படையினர் அங்கு காணப்பட்டனர். ஏதோ பெரிய சம்பவம் நடக்கப் போகிறது என்பது போன்ற சூழல் நிலவியது.
 
மல்யுத்த வீராங்கனைகளின் கூடாரத்திலிருந்து ஏதோ சத்தம் வர ஆரம்பித்தது. சற்று அருகில் சென்று பார்த்தபோது ​​போராட்டக்காரர்கள் கைகளில் தேசிய கொடியை உயர்த்தியவாறு 'இன்குலாப் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பியதைக் கண்டேன்.
 
சில நிமிடங்களுக்குப் பிறகு இவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி வெளியே வந்து பிரதான சாலைக்கு வர முயற்சித்தனர். போலீசார் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்தனர்.
 
அதே நேரத்தில் திடீரென்று பிரபல மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மல்லிக் கூட்டத்தை தள்ளிக்கொண்டு வெளியே வந்து வேகமாக முன்னேற ஆரம்பித்தார். அதே நேரத்தில், பெண் போலீசார் அவரை சுற்றி வளைத்துப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சாக்‌ஷியை சுற்றி போராட்டக்காரர்களின் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் போலீசார் அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பதில் வெற்றிகண்டனர்.
 
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் இருந்து தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
 
"தேச விரோத மற்றும் தவறான எந்தச்செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இதைச் செய்யாதீர்கள். புதிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. அத்தகைய பெருமைக்குரிய தருணம் இது. அமைதியையும் ஒழுங்கையும் பேணுமாறும், சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தேசவிரோத பிரசாரம் செய்ய வேண்டாம். முழக்கங்களை எழுப்ப வேண்டாம்," என்று அந்த அதிகாரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து சாக்‌ஷி மல்லிக் தனது கூடாரத்திற்கு திரும்பிச் செல்வதை பார்க்க முடிந்தது. இது குறித்து அவரிடம் பேசியபோது, ​​"நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் அமைதியாக முன்னே சென்றுகொண்டிருந்தோம். அமைதியாக ஊர்வலம் செல்வோம் என்று கூறியிருந்தோம். ஆனால் முன்னே தடுப்புகள் இருந்தன. எங்களை வலுக்கட்டாயமாகப் பின்னுக்குத் தள்ளி தடுத்து நிறுத்தினர்," என்று கூறினார்.
 
சாக்‌ஷியின் அடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டோம். அதற்கு அவர் “தர்ணாவை தொடர்வதுதான் அடுத்தகட்ட நடவடிக்கை” என்று பதில் சொன்னார்.
 
இந்த முழு விவகாரத்திலும், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்துள்ளன. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அரசு மற்றும் பாஜக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வரவில்லை.
 
இதற்கிடையில், டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் பேருந்துகளில் அடைக்கப்பட்டனர். ஒரு பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த ஒரு போராட்டக்காரர், "பார்த்தீர்களா, ஒரு ஜனநாயக நாட்டில் எங்களால் போராட்டம் கூட நடத்த முடியவில்லை. நாங்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரை நடந்து செல்ல விரும்பினோம். எங்கள் போராட்டம் அமைதியானது. இங்கு நடந்திருப்பது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவருவது போன்றது," என்றார்.
 
அதே பேருந்தின் மற்றொரு ஜன்னலில் ஒரு இளைஞரை நான் பார்த்தேன். போலீஸாருடன் நடந்த மோதலில் அவருடைய சட்டையின் கைப்பகுதி கிழிந்திருப்பதை பார்க்க முடிந்தது.
 
"இன்று திறக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்காக நாட்டின் மக்கள் அனைவருக்கும் நாங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளோம். ஆனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர் எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிலையில் நாடாளுமன்றம் எப்படி அமைதியாக இருக்கமுடியும்," என்று அந்த இளைஞர் வினவினார்.
 
”நாடாளுமன்றத்தை நடத்துபவர்கள் எப்படி அமைதியாக இருக்கமுடியும்? நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பெண் எம்பிக்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? இதற்காகத்தான் நாங்கள் குரல் எழுப்புகிறோம். இவ்வளவு மோசமாகத் துன்புறுத்தி அழைத்துச்செல்லும் அளவிற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குரலை அடக்கும் வேலை நடக்கிறது,” என்றார் அவர்.
 
உடலில் உயிர் இருக்கும் வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அந்த இளைஞர் கூறினார்.
 
“இந்தப் போராட்டம் சாக்‌ஷி மல்லிக் மற்றும் வினேஷ் போகட் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும், மூவர்ணக் கொடியின் பெருமையை உயர்த்த வேண்டும் என்று நினைக்கும் லட்சக்கணக்கான மகள்களின் போராட்டம் இது. இது நாட்டின் தன்மானப்பிரச்னை. இது நாட்டின் சகோதரிகள் மற்றும் மகள்களின் பிரச்சனை. அவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், அநீதிக்கு எதிராக நாமும் நிற்க முடியும் என்று நாட்டின் எந்த மகளும் ஒருவேளை நினைத்துக்கூட பார்க்க முடியாது.”
 
இந்த இளைஞரின் கோபமும் வேதனையும் அவருடைய வார்த்தைகளில் தெளிவாகத் தெரிந்தது. ’மகளை காப்பாற்றுங்கள், மகளை படிக்க வையுங்கள்’ என்று சொல்பவர்கள், ஜந்தர் மந்தரில் அமர்ந்திருக்கும் மகள்களுக்கு நீதி வழங்காமல், அவர்களின் மன உறுதியை உடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்போது, ​​இந்த மனநிலையை இந்திய மக்கள் அறிய வேண்டும். அரசு எவ்வளவு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டாலும், அகிம்சையின் பாதையில் சென்று அவர்களின் ஒவ்வொரு வன்முறைக்கும் பதிலடி கொடுத்தபடி முன்னேறுவோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
உத்தரப்பிரதேசத்தின் மீரட் மற்றும் முசாஃபர் நகரைச் சேர்ந்த சில பெண்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நேற்றிரவு டெல்லி வந்துள்ளனர். இந்த நிகழ்வின்போது அவர்களில் சிலரை நான் சந்தித்தேன்.
 
மீரட்டில் இருந்து வந்துள்ள கீதா செளத்ரி, பாரதிய கிசான் யூனியனுடன் தொடர்புடையவர்.
 
"காவல்துறையினர் எங்களை தள்ளினார்கள். இது அரசின் சர்வாதிகாரம். இதற்கு 2024-ல் பதிலடி கொடுப்போம். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் மல்யுத்த வீரர்களுக்கே இப்படி நடந்தால், சாமானியர்களின் கதி என்ன? பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். குற்றவாளியை ஏன் அவர்களால் பிடிக்க முடியவில்லை. பிரிஜ் பூஷண் சிங் அரசின் பிரதிநிதி என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
சிறிது நேரத்தில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜந்தர் மந்தரில் காவல்துறையினரும் ஊடகவியலாளர்களும் மட்டுமே கூடியிருந்தனர். ஆனால் கதை இன்னும் முடியவில்லை.
 
கடந்த 35 நாட்களாக மல்யுத்த வீராங்கனைகள் தங்கியிருந்த கூடாரம் பிடுங்கி எறியப்பட்டது. அந்த கூடாரத்திற்குள் இருந்த போர்வைகள், மெத்தைகள் போன்றவையும் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டன.
 
போராட்டக்காரர்களை போராட்ட இடத்தில் மீண்டும் அமர அனுமதிக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
 
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அங்கு வந்திருந்த சமூக ஆர்வலர் அதுல் திரிபாதி,"புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா நடைபெற்றுள்ள அதே நாளில் நாட்டின் பிரபல மல்யுத்த வீராங்கனைகள் நசுக்கப்படுகின்றனர். இது ஜனநாயகத்தின் படுகொலை. இன்றை தினம் இந்திய வரலாற்றில் ’கருப்பு நாளாக’ நினைவுகூரப்படும். இன்று நாட்டின் மகள்கள் இப்படி இழுத்துச்செல்லப்படுவதை பார்க்கும்போது, இந்த அடக்குமுறையைக்கண்டு இதயம் அழுகிறது. இதை நாடு ஏற்காது,"என்றார்.
 
நேரம் செல்லச்செல்ல ஜந்தர் மந்தரில் மக்களின் எண்ணிக்கை பெயரளவுக்கு மட்டுமே இருந்தது. புயலை தனக்குள்ளே மறைத்து வைத்திருக்கும் ஒருவிதமான அமைதி அங்கே காணப்பட்டது.