திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (18:47 IST)

ரஷ்யா vs நேட்டோ அணு ஆயுதப் போர் வெடிக்குமா? புதினின் புதிய உத்தரவால் உலக நாடுகள் அச்சம்

Ukraine war
யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்டி வருகிறார். ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அவற்றை அனுப்பிவைத்தது முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
 
இந்த அணு ஆயுதங்கள் யுக்ரேன் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அங்கு இருந்து போலந்து மற்றும் லிதுவேனியா போன்ற நேட்டோ நாடுகளையும் குறிவைக்க முடியும்.
 
இத்துடன், 500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பொறுப்பற்ற செயல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். யுக்ரேனின் ஜபோரிஷியா அணுமின் நிலையத்தையும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.
 
ஆனால் தற்போதைய உலகில் ரஷ்ய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் மட்டும் கவலைக்குரியவை என்பதை விட, அணு ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சமன் செய்ய சீனாவும் விரும்புகிறது என்பது கவனிக்கத்தக்கது.
 
அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் எல்லா இடங்களிலும் காலாவதியாகின்றன என்ற போதிலும், புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இயற்றப்படவில்லை.
 
இந்த கட்டுரை மூலம் உலகில் அணுகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதா என்பதை அறிய முயற்சிப்போம்.
 
ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
 
ரஷ்யாவிடம், போர்க்களத்தில் பயன்படுத்தக்கூடிய பல சிறிய தந்திரோபாய அணு ஆயுதங்கள் உட்பட ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த தந்திரோபாய அணு ஆயுதங்களில் சில ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டைப் போலவே சக்திவாய்ந்தவை.
 
பெலாரஸ் நாட்டில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளது எவ்வளவு பெரிய கவலையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, ரஷ்யாவின் முன்னாள் அணுசக்தி பேரப் பேச்சாளரும், இப்போது வியன்னாவின் அணுஆயுத குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளருமான நிகோலாய் சோகோவிடம் பேசினோம்.
 
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி இது என்று அவர் கூறினார். மேலும், “ரஷ்யாவில் அணு ஆயுதங்களை குறைவாகப் பயன்படுத்துவது குறித்து நிபுணர்களிடையே பொது விவாதம் உள்ளது. ஆனால் அது ரஷ்ய அரசின் சிந்தனையை மட்டுமே பிரதிபலிக்கிறது. இது ஒரு தீவிரமாக கவனிக்கவேண்டிய விஷயம்," என்றார்.
 
இப்படி பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது யுக்ரேனை விட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக நிகோலாய் சோகோவ் அச்சம் தெரிவித்துள்ளார்.
 
"யுக்ரேனுக்கு எதிரான தாக்குதலின் போது அந்நாடு மேற்கொள்ளும் எதிர்த்தாக்குதல்கள் ரஷ்யாவில் ஒரு பினாமி போராக பார்க்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலும் அங்கு யுக்ரேனுக்கு எதிரானது அல்ல என்பது மட்டுமல்ல, அது நேட்டோவுக்கு எதிரான தாக்குதலாக அந்நாட்டில் பார்க்கப்படுகிறது. யுக்ரேன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று பலர் நினைக்கிறார்கள்."
 
"ஆனால் எனக்கு வேறு கருத்து உள்ளது. அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். யுக்ரேன் மீதான இத்தாக்குதலை அணு ஆயுதப் பயன்பாடு வரை ரஷ்யா எடுத்துச் செல்லும் ஆபத்து இருப்பதையும் நான் உணர்கிறேன்."
 
மேற்கத்திய நாடுகளில் இந்த ஆபத்து தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் விளாடிமிர் புதின் தற்போதைய போரை எப்படி இந்த எல்லைக்கு எடுத்துச் செல்வார்?
 
இதற்கு பதிலளித்த நிகோலாய் சோகோவ், “திடீரென அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படாது. முதலில் வழக்கமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். சிறிய அளவில் அவை இருக்கும். இதில், யுக்ரேனின் எதிர்த்தாக்குதலில் தொடர்புடைய நேட்டோவின் இலக்குகளை ரஷ்யா குறிவைக்கலாம்.
 
"இதற்கு நேட்டோ எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது மோதல் எவ்வளவு தூரம் அதிகரிக்கும் என்பதை தீர்மானிக்கும். நேட்டோவுக்கு ஒரு வலுவான செய்தியை அளிக்கும் அளவுக்கு ரஷ்யா அணுகுண்டு சோதனை ஒன்றையும் நடத்தலாம். இதே போல், போலந்து மீதான அணு ஆயுத தாக்குதலின் அச்சுறுத்தல் அதிகரிக்கலாம். இது போன்ற தாக்குதல்கள், நேட்டோவுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கும் விதத்திலேயே இருக்கும். ஆனால் இந்த நிலைமை மோசமாகி பெரிய அளவில் வெடிக்கும் ஆபத்தும் உள்ளது.
 
அணு ஆயுத மோதலின் ஆபத்து எழும் அளவுக்கு தாக்குதல்களை அதிகரிக்க ரஷ்யா விரும்புகிறது என்றும், அதற்கு பயந்து நேட்டோ பின்வாங்குவதாகவும் நிகோலாய் சோகோவ் கூறுகிறார். இது ஒரு அணு ஆயுத தாக்குதல் மிரட்டல்.
 
அப்படியென்றால் இந்த அணு ஆயுத அச்சுறுத்தலை உலகம் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது.
 
ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்குப் பதில் அளிப்பதில் அமெரிக்கா மிகுந்த கவனத்துடன், அளவாகவும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், அணு ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக நம்பவில்லை என அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அதிபர் ஜோ பைடன், 'ரஷ்யாவின் தற்போதைய போக்கு ஒரு உண்மையான அச்சுறுத்தல்' என்றே முழுமையாக நம்புகிறார்.
 
அமெரிக்காவில் உள்ள வுட்ரோ வில்சன் சர்வதேச அறிஞர்களுக்கான அமைப்பின் ராபர்ட் லிட்வாக், "ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது," என்று கூறுகிறார்.
 
மேலும், "ரஷ்யா தந்திரமாக ஒரு சிறிய அணு ஆயுதத்தைப் பயன்படுத்துமா அல்லது பெரிய வெடிகுண்டைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துமா என பைடன் அரசு ஆய்வு செய்துவருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இரண்டு வகையான தாக்குதல்களையும் ஒரே மாதிரி தான் எடுத்துக்கொள்ளும். சிறிய ஆயுதம் என்றாலும் சரி, பெரிய அணுகுண்டு என்றாலும் சரி. அது அணு ஆயுதத் தாக்குதல் தான் என்றே பைடன் கருதுவார்."
 
யுக்ரேனின் ஜபோரிஷியா அணுமின் நிலையத்தை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கும் இதுவே பொருந்தும். இந்த ஆலை கடந்த ஒரு வருடமாக ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்துவருகிறது.
 
ரஷ்யா அங்கு கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிக்கைகளின்படி, இந்த ஆலைக்கு அருகில் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
 
இது குறித்து ராபர்ட் லிட்வாக் பேசுகையில், “ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ளது," என்றார்.
 
"ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த மின் உற்பத்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அமெரிக்கா அதை அணு ஆயுதத் தாக்குதலாகத் தான் பார்க்கும். இது மட்டுமல்ல, அதற்கேற்றவாறு தான் அமெரிக்கா செயல்படும் என்பது எனது கருத்து."
 
ஆனால் புட்டினின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியுமா? சீன அதிபர் ஷி ஷின்பிங் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால், 'முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம்' என்ற கொள்கையை சீனா கடைபிடித்து வருகிறது. இதை வலியுறுத்தியும் பேசியுள்ளது. அதாவது ஏதாவது போர் ஏற்பட்டால் கூட, முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியாக சீன அரசு கூறியுள்ளது.
 
ராபர்ட் லிட்வாக் பேசுகையில், “யுக்ரேனுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அளிக்கவேண்டாம் என்று அமெரிக்கா சீனாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஷி ஷின்பிங் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் அங்கு இருந்தார். இந்த இரு தலைவர்களும் யுக்ரேனுக்கு எதிராக எந்த வகையான அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவதை எதிர்த்தனர் என்று நினைக்கிறேன். இது ரஷ்யாவிற்கு சற்று தடையை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சர்வதேச ஒப்பந்தங்கள் இருந்தன. ஆனால் அந்த ஒப்பந்தங்களின் ஆயுட்காலம் தற்போது முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் இதுவரை கையெழுத்தாகவில்லை.
 
அந்த நேரத்தில் இரண்டு வல்லரசுகள் மட்டுமே இருந்ததாகவும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அணு ஆயுத மோதலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் லிட்வாக் கூறுகிறார்.
 
“ஆனால் இப்போது சீனாவும் ஒரு வல்லரசாக வளர்ந்துள்ளது. இதன் காரணமாக புதிய சவால்களும் எழுந்துள்ளன. போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் விரிவடைந்துள்ளன. உதாரணமாக, ஐரோப்பாவின் பாதுகாப்பின் பார்வையில் யுக்ரேன் மிக முக்கியமான நாடாக உள்ளது. வடகிழக்கு ஆசியாவில் தைவான் மற்றும் சீனா இடையேயும் இதே நிலைதான் காணப்படுகிறது.
 
சீனாவைப் பொறுத்தவரை, அது 1964 ஆம் ஆண்டிலேயே அணுசக்தி நாடாக மாறியது, ஆனால் இப்போது அது அணுசக்தி வல்லரசு நாடாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சமநிலை மற்றும் அரசுகளின் அமைப்பின் சிக்கல் அதிகரித்து வருகிறது.
 
சந்திரயான் -3: ராக்கெட்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏவப்படுவதற்கு என்ன காரணம்?
16 ஜூலை 2023
அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ஆபத்து 
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
யுக்ரேன் தலைநகர் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் சேதமடைந்த கட்டிடம்
 
அணு ஆயுதங்களுக்கான சீனாவின் தற்காலத்திய போட்டி
நோர்வே பாதுகாப்பு நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றும் ஹென்ரிக் ஹெய்ம், இப்போது பல நாடுகள் தங்கள் பாதுகாப்புக் கொள்கையில் அணு ஆயுதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என்கிறார்.
 
இது ஆசியாவில் தீவிரமடைந்து வருவதாகத் தெரிகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மட்டுமின்றி, சீனாவின் அணுசக்தி கொள்கையும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சவாலை அதிகரித்துள்ளது.
 
"காலம் காலமாக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவுகளில் அணு ஆயுதங்கள் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால், தற்போது சீனா தனது அணு ஆயுத தயாரிப்பை விரிவுபடுத்துவதால், இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்து வருகிறது."
 
"சீனா தனது அணு ஆயுத உற்பத்தியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்தது. இது 2021 இல் உலக அளவில் தெரியவந்தது. மேற்கு சீனாவில் மூன்று இடங்களில் ஏவுகணைகளை ஏவும் மையங்கள் கட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஒவ்வொரு இடத்திலும் 100க்கும் மேற்பட்ட நிலத்தடி கட்டிடங்கள் உள்ளன. இந்த ஏவுதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அணு ஆயுதங்களின் எதிர்காலம் மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு பற்றிய விவாதம் சூடுபிடித்துள்ளது.
 
சில மதிப்பீடுகளின்படி, தற்போது சீனாவிடம் 200 முதல் 300 அணு ஆயுதங்கள் உள்ளன என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 1500 அணு ஆயுதங்கள் உள்ளன.
 
இன்னும் 10 முதல் 12 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் அணு ஆயுதங்களுக்கு சமமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஹென்ரிச் ஹெய்மின் கூற்றுப்படி, “சீனா தனது அணுசக்தி கவசத்தை வலுப்படுத்த விரும்புகிறது. தேவைப்பட்டால், யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கையைப் போல, தைவானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சீனாவும் எடுக்க முடியும்."
 
ஆனால் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை மனதில் வைத்து, அமெரிக்காவுடன் எந்த மோதலையும் எதிர்கொள்ளும் திறனைப் பெற சீனா விரும்புகிறது என்றும் அவர் கூறுகிறார். "அமெரிக்கா முதலில் சீனாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், சீனா பதிலடி கொடுக்க முடியும்."
 
சீனாவின் அணு ஆயுதத் திட்டத்தை விரிவுபடுத்துவதைக் கருத்தில் கொண்டு, சீனா தனது 'முதலில் தாக்கமாட்டோம்' என்ற கோட்பாட்டைக் கைவிட தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
சீனாவின் இந்த அணுசக்தி கொள்கை 1960களில் இருந்து இந்த கோட்பாடு நடைமுறையில் உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உடன்பாடு எதுவும் இல்லை. மாறாக அது அந்நாடு தானாகவே அறிவித்துக்கொண்ட ஒரு உறுதிமொழியாக இருந்துள்ளது.
 
ஹென்ரிச் ஹெய்ம் பேசிய போது,“அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த வகையான 'முதலில் தாக்கமாட்டோம்' என்ற கோட்பாட்டை ஒருபோதும் அறிவித்ததில்லை. அமெரிக்காவும் ரஷ்யாவும் சில சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதற்கான ஆபத்துக்கள் இன்னும் முழுமையாக இருக்கிறது என்பதே இதன் பொருள்.
 
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு நாடுகளுக்கும் இடையில் இதுபோன்ற பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளும் பலமுறை செய்யப்பட்டுள்ளன, ஆனால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அதுபோன்ற பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நடப்பதற்கான அறிகுறிகளும் தற்போதைய நிலையில் எங்கும் காணப்படவில்லை.
 
யாசிதி மத பெண்கள், குழந்தைகளை அடிமைகளாக விற்கும் ஐ.எஸ் குழு - டெலிகிராமில் நடக்கும் விற்பனை
17 ஜூலை 2023
அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ஆபத்து 
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
இந்த ஆண்டு மே மாதம் நடந்த 'வெற்றி தின' அணிவகுப்பின் போது கிரெம்ளின் மாளிகையின் செஞ்சதுக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய ஸ்டார்ட் (மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்) உடன்படிக்கையில் சேர மாட்டோம் என்று ரஷ்யா கூறியது.
 
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நீண்ட தொலைவுக்கான அணு ஆயுத கட்டுப்பாடு இருந்தது.
 
ஆனால் தற்போது புதிய உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில் நிலைமை எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, ரோஸ் கோட்டெமோல்லருடன் நாங்கள் பேசினோம்.
 
நேட்டோவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அவர் தற்போது அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்போக்லி இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் கல்வியின் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தத்தின் விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
 
“புதிய ஸ்டார்ட் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை ரஷ்யா நிறுத்திவிட்டது. அதாவது, இப்போது அது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்ய யாரையும் அனுமதிக்காது. அணு ஆயுதத் தடையின் நிலையை அது தினசரி அடிப்படையில் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்வதில்லை.
 
"ஆனால், புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை, பழைய ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ் ஆயுதக் கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது. அதாவது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் மொத்த அமைப்புகளின் எண்ணிக்கையை (ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை)700 ஆகக் கட்டுப்படுத்தும் என உறுதி அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் தற்போதைக்கு அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதாக கூறியுள்ளன.
 
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முடிவுக்கு வந்த நேரத்தில் இருந்த நிலைமையைப் போன்றே தற்போதைய நிலை இருப்பதாக ரோஸ் கோட்மெல்லர் நம்புகிறார்.
 
“1991 மற்றும் 1992 இல் ஒரு பெரிய நெருக்கடி இருந்தது. நிச்சயமற்ற தன்மையும் உறுதியற்ற தன்மையும் இருந்தது. அந்த நேரத்தில், சோவியத் யூனியனில் இன்றைய ரஷ்யாவை விட அதிகமான அணு ஆயுதங்கள் இருந்தன. அப்போது அந்த ஆயுதங்களில் சில காணாமல் போய்விடுமோ அல்லது பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கக்கூடுமோ என்று நாங்கள் கவலைப்பட்டோம்."
 
"இந்த நேரத்தில், ரஷ்யாவிடம் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் அணு ஆயுதங்கள் இருந்தன. அதே காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்களுக்கு இடையே இந்த அச்சுறுத்தல்களைக் குறைக்கும் முயற்சிகள் நிதர்சனமாக கண்களுக்குத் தெரிந்தன. ஆனால், அதுபோன்ற எதுவும் தற்போது தென்படவில்லை."
 
குர்ஆன் எரிக்கப்பட்டது பற்றிய ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா என்ன செய்தது?
14 ஜூலை 2023
அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ஆபத்து 
பட மூலாதாரம்,EPA
ரஷ்யாவில் அணு ஆயுதங்கயை முதலில் பயன்படுத்துவதா, அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி யாராவது தாக்கினால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவதா என்பது குறித்த விவாதம் கூட உள்ளது. இருப்பினும், இந்த விவாதத்தின் காரணமாக ரஷ்யாவின் அணுசக்தி கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று மேலை நாடுகளில் அஞ்சப்படுகிறது.
 
எவ்வாறாயினும், ரஷ்யாவிற்குள் உறுதியற்ற தன்மை நிலவுவது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அண்மையில் ரஷ்யாவில் வாக்னர் குழுவின் கிளர்ச்சியும் ஏற்பட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிபர் புதினின் நம்பகத்தன்மைக்கு சவால் விடும் வகையில் இருக்கின்றன.
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிகாரத்தின் மீதுள்ள பிடியைத் தக்கவைத்துக் கொள்ள அவர் திட்டமிடலாம்.
 
ஆனால் ரோஸ் குட்டெமோலர் பேசிய போது, “வாக்னர் குழுவின் கிளர்ச்சி புதினுடைய தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று என்னால் கூற முடியாது. ஆனால் ரஷ்யா உள்நாட்டுப் போரின் விளிம்பில் உள்ளது என்று விளாடிமிர் புதின் மூன்று நாட்களில் இரண்டு முறை கூறியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு உள்நாட்டுப் போர் வெடித்தால் அங்குள்ள அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி பொருட்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள் இயல்பாகவே எழும்," என்றார்.
 
ஆனால் அணு ஆயுதப் பரவல் மற்றும் கட்டுப்பாடு குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?
 
சீனா எப்போதும் ஒரு வெளிப்படைத்தன்மையை விரும்பாத நாடாகவே இருந்து வருகிறது. இதனால் இத போன்ற முயற்சிகள் அவ்வளவு தூரம் சாத்தியமில்லை என்று ரோஸ் குட்டெமோலர் கூறுகிறார். சீனா தனது அணுசக்தி மற்றும் பிற ராணுவ திறன் பற்றிய தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில் அந்நாட்டின் பலவீனத்தை அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சீனா சந்தேகிக்கிறது.