ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:21 IST)

கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா இந்த முறை கைப்பற்றுமா? – மெஸ்ஸியின் ஃபார்ம் எப்படி உள்ளது?

Messi
கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடங்கிவிட்டது. காத்திருப்புகள் முடிவுக்கு வந்து போட்டிகள் தொடங்கிவிட்டன. அர்ஜென்டினா ரசிகர்கள் இன்றைய போட்டிக்காக காத்திருக்கிறார்கள்.

உலகக் கோப்பை களத்தில் இந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூத்தி செய்யுமா? லியோனெல் மெஸ்ஸியும் அணியின் மற்ற வீரர்களும் எப்படியான ஃபார்மில் இருக்கிறார்கள்?

அது 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி. கோபா டெல் ரே என்ற ஸ்பானிய கால்பந்து போட்டியில் பார்சிலோனா, ஜெடாஃபீ ஆகிய அணிகள் மோதிக் கொண்டிருந்தன.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஜாவி ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் அந்த 19 வயது வீரர் ஒரு கோல் அடித்தார்.

மைதானத்தின் நடுவில் தனது கால்களுக்குக் கிடைத்த பந்தை, ஒற்றை ஆளாக எதிரணியின் ஆறு வீரர்களைக் கடந்து கொண்டு சென்று கோல் அடித்தார்.

ஜெடாஃபீயின் பாதி அணி அவரைத் தடுக்கப் போராடியது. ஆனால், முடியவில்லை. மாரடோனாவுக்கு நிகரான, இல்லையில்லை அவரை மிஞ்சக்கூடிய திறமைவாய்ந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி என்பதை கால்பந்து ரசிகர்கள் உணர்ந்த தருணம் அது.

1986ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாரடோனா அடித்த பிரபலமான கோலை மெஸ்ஸி அடித்த அந்த கோல் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது.

அந்த ஆண்டில்தான் அர்ஜென்டினா கடைசியாக உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு, 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அடுத்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி கையில் ஏந்துவதற்காக உலகம் முழுக்க அந்த அணியை ஆதரிக்கும் கால்பந்து ரசிகர்களின் கனவாக உள்ளது.

மாரடோனாவின் அதிரடி ஆட்டத்தில் அர்ஜென்டினா 1986ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றியபோது மெஸ்ஸி பிறக்கக்கூட இல்லை. அதற்கு அடுத்த ஆண்டில் தான் அவர் பிறந்தார்.

35 வயதான மெஸ்ஸிக்கும் உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதே கனவாக உள்ளது. கால்பந்து வீரர்களுக்கு அளிக்கப்படும் பேல்லோன் டோர் விருதை ஏழு முறை வென்றுள்ள மெஸ்ஸி, 2014ஆம் ஆண்டு கோப்பையை மிகவும் நெருங்கி வந்தார். ஆனால், இறுதி ஆட்டத்தில் கோப்பை பறிபோனது.
Qatar World Cup

2018ஆம் ஆண்டில், ஒரேயொரு வெற்றியோடு ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது. 2009ஆம் ஆண்டு செக்கோஸ்லோவேகியாவுடன் 6-1 என்ற கணக்கில் அடைந்த தோல்விக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டு ஸ்பெயின் உடனான ஆட்டத்தில் 6-1 என்ற கணக்கில் அடைந்த தோல்வி அர்ஜென்டினாவின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

இந்த உலகக் கோப்பை தான் தமக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால், இம்முறை தனது வாழ்நாள் அனுபவத்தின் அத்தனை திறன்களையும் செலுத்தி வென்றுவிட வேண்டுமென்ற வெறியோடு களமிறங்கியுள்ளார் லியோனெல் மெஸ்ஸி.

“இது என்னுடைய கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம். என்னுடைய பெருங்கனவை அடைவதற்கான கடைசி வாய்ப்பு. நான் உடல் மற்றும் மனதளவில் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். அர்ஜென்டினாவுக்கு வெளியிலும் மக்கள் பலர் இந்த அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்று விரும்புவது, அதிலும் குறிப்பாக அதற்கு நான் காரணம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் ஆடிய கால்பந்து போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் மற்ற உலகக் கோப்பை போட்டிகளின்போது இருந்ததைவிட சிறந்த முறையில் வந்துள்ளோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போதுதான் கோபா அமெரிக்காவை வென்றுள்ளோம். அது பெரியளவிலான அழுத்ததை நீக்கியுள்ளது.

அது எங்களை வேறு வழியில் செயல்படத் தூண்டியுள்ளது. தேசிய அணி என்றும் முடிவுகளைப் பற்றியும் எந்தப் பதற்றமும் இன்றி, ஆட்டத்தை விரும்பி ஆட வழிவகுத்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

கைகூடி வருகிறதா 36 ஆண்டுகால கனவு?

கால்பந்து என்று வந்துவிட்டால், உலகளாவிய சூப்பர் பவர்களில் ஒன்றாக அர்ஜென்டினா கருதப்படுகிறது. இரண்டு உலகக் கோப்பை வெற்றிகள், 15 கோபா அமெரிக்கா, 2004, 2006 எனத் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்று அதற்கெனத் தனி ஆதிக்கம் கால்பந்து போட்டிகளில் உண்டு.

உலகின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் 1986ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தின் கடவுளாகக் கருதப்படும் டியேகோ மாரடோனாவை முழுவதுமாக நம்பியிருந்து உலகக் கோப்பையை வென்றது. மாரடோனா தனது கைகளில் கோப்பையை ஏந்தினார். அவரது ரசிகர்கள் தங்கள் தோள்களில் அவரை ஏந்தினார்கள்.

ஆனால் அதற்குப் பிறகு, இரண்டு முறை ஃபிஃபா இறுதிப் போட்டி வரை அர்ஜென்டினா சென்றுள்ளது. ஆனால், 1990ஆம் ஆண்டில் மேற்கு ஜெர்மனியிடம் 1-0 என்ற கணக்கிலும் 2014ஆம் ஆண்டில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கணக்கிலும் தோல்வியைத் தழுவியது.

இப்போது மீண்டுமொரு உலகக் கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் 36வது ஆண்டாக அந்தக் கனவு தொடர்கிறது. இந்த முறை நனவாகுமா?

நட்பு ரீதியிலான போட்டிகள் உட்பட அர்ஜென்டினா அணி ஆடிய கடந்த 30 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்கவே இல்லை. அவர்கள் இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை மெஸ்ஸி உட்பட கடந்த சீசனில் அணியினருடைய ஆட்டம் காட்டுகிறது.

2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், பிரான்சிடம் தோற்று வெளியேறியபோது இருந்ததைப் போல் இப்போது இந்த அணி இல்லை என்று சொல்லப்படுகிறது. அணியின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி, தேர்ந்தெடுத்த வீரர்களில், ஜொவானி லோ செல்சோ மட்டும் விலாரேயால் அணிக்காக விளையாடும்போது கால் தசை கிழிந்ததால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

மத்திய மிட்ஃபீல்டில் ஆடக்கூடிய ஜொவானி லோ செல்சோ இல்லாததால், ஸ்கலோனி அணியினரின் ஃபார்மேஷனை அதற்கு ஏற்றாற்போல் மாற்றியிருப்பார். கடந்த கோபா அமெரிக்கா வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த எமிலியானோ மார்ட்டினெஸ் அணியின் முக்கிய நம்பிக்கையாக உள்ளார்.

கோல் போஸ்ட்டுக்குள் வருகின்ற பந்தைத் தடுத்து நிறுத்துவதாக மட்டுமின்றி, கோல் போடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்போது முன்னேறி வந்து தற்காப்பு ஆட்டத்தை ஆடுவதிலும் தனது சிறப்பான திறமையை கோபா அமெரிக்காவில் வெளிப்படுத்தினார். கடந்த சீசனில் அவர் எடுத்து வைத்த அடிகள் பெரும்பான்மையாகத் தவறவில்லை.

டிஃபண்டர்களிலும் நிகோலஸ் ஓட்டமெண்டி, கிறிஸ்டியான் ரொமெரோ போன்றவர்கள் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். அர்ஜெடினா அணியில், இவர்கள் போக மிட்ஃபீல்டில் ஆடக்கூடிய ராட்ரிகோ டி பால், ஃபார்வார்டில் ஆடக்கூடிய லௌதாரோ மார்ட்டினெஸ் போன்றோரும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த முறை கோப்பையைக் கண்டிப்பாகக் கைப்பற்றி விடுவோம் என்ற நம்பிக்கையை அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அளித்துள்ளது.

கோப்பையைத் தூக்குவது எளிதாக இருக்கப் போவதில்லை

அர்ஜென்டினா முழு ஃபார்மில் இந்த முறை களமிறங்கினாலும் கூட அவர்களுக்கு சவாலாக பிரேசில், இங்கிலாந்து போன்ற அணிகள் இருக்கின்றன.

இரான் உடனான போட்டியில் இங்கிலாந்து அணியின் புகாயோ சாக்கா, ஜூட் பெல்லிங்ஹாம், ரஹீம் ஸ்டெர்லிங் போன்றோர் அர்ஜென்டினா அணியின் மிட்ஃபீல்ட் மற்றும் ஃபார்வார்ட் வீரர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறார்கள்.

இரான் உடனான ஆட்டத்தில் எதிரணியால் தடுக்கவே முடியாத ஆட்டக்காரராகத் திகழ்ந்தார் சாக்கா.

அர்ஜென்டினா அணியில் காயம் காரணமாக ஸ்டிரைக்கர்களான நிகோலஸ் கொன்சாலஸ், குவாகீன் கொர்ரெயா இருவரும் அணியில் இடம் பெறாமல் போனது ஓர் இழப்பாகக் கருதப்படுகிறது. அதன் தாக்கம் அணியின் ஆட்டத்திலும் தெரிய வாய்ப்புள்ளது.

மிட்ஃபீல்டர்களான அப்துல்லேலா அல் மல்கி, முகமது கன்னோ இருவரும் சமீபத்திய ஆட்டங்களில் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சவுதியுடனான ஆட்டம் அர்ஜென்டினாவை விட சவுதிக்குத்தான் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்றாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் இன்னும் கடினமான அணிகள் காத்திருக்கின்றன.

2018ஆம் ஆண்டில் பிரான்ஸ் அணியிடம் தோற்று அர்ஜென்டினா வெளியேறியது. இந்த முறையும் பிரான்ஸ் அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. ஆகவே, கோப்பையை வெல்லும் குறிக்கோளோடும் ஃபார்மோடும் இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.

அதேநேரம், “நாங்கள் கோப்பையை வெல்வதற்காக விளையாடப் போவதில்லை. உலகக் கோப்பை போட்டிகளை நன்கு அனுபவித்து, மகிழ்ச்சியோடு ஆடப் போகிறோம்,” என்று தெரிவித்துள்ளார் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி.